Published:Updated:

இந்தச் சூழலிலும் காஷ்மீருக்கு 4G கிடையாது... உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

Kashmir
Kashmir

பிரதமர் மோடி அனைத்து இந்தியர்களும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ள ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்வதற்கும் இதர அத்தியாவசிய சேவைகளைப் பெறுவதற்கும்கூட தற்போது 2G வேக இணையச் சேவை போதுமானதாக இருக்காது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் உதயமாகின. இந்தத் திட்டத்தால் அங்கு எப்போது வேண்டுமானாலும் கலவரம் வெடிக்கலாம் என்ற சூழல் இருப்பதாகச் சட்ட ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்கப் பல கட்டுப்பாடுகளை விதித்தது இந்திய அரசு. இந்தக் கட்டுப்பாடுகளால் மக்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்தனர். பள்ளிகளும் மூடப்பட்ட நிலையில் மாணவர்கள் பெரும்பாலான நாள்களை வீட்டிலேயே கழிக்க நேர்ந்தது. இணையச் சேவையும் அங்கு முற்றிலுமாக முடக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 4G வேக இணையச் சேவை வழங்குமாறு 'Forum of Media Professionals,' சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கில் நேற்று (மே 11-ம் தேதி) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

 Kashmir
Kashmir

``ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது குறைக்கப்பட்ட இணையதள வேகம் ஊரடங்கு காரணமாக மீண்டும் அதிகப்படுத்தப்படாது" என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், ஊரடங்கு நேரத்தில் 4G வேக இணையச் சேவை அவசியம் என்பதற்கான மனுதாரர்களின் கருத்துகளை ஆராய மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் குழு ஒன்றை அமைக்கவும் பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்த காத்துக்கொள்ளப் பிரதமர் மோடி அனைத்து இந்தியர்களும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ள ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்வதற்கும் இதர அத்தியாவசிய சேவைகளைப் பெறுவதற்கும்கூட தற்போது 2G வேக இணையச் சேவை போதுமானதாக இருக்காது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

`இப்போதுகூட 4G சேவை இல்லையென்றால் என்ன செய்வது?' - அரசிடம் காஷ்மீர் மக்கள் வைக்கும் கோரிக்கை

"நாட்டின் பாதுகாப்பையும் மனித அடிப்படை உரிமைகள் பதுக்கப்படுவதையும் நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும். ஜம்மு-காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு எதிராகப் பெரும் நெருக்கடியில் மூழ்கியுள்ளது என்பதை நாம் உணர்ந்துள்ளோம். அதே நேரத்தில், தொற்றுநோய் பரவல் மற்றும் ஊரடங்கால் மக்கள் படும் அவதிகளையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளது” என்று நீதிபதி என்.வி.ரமணா குறிப்பிட்டார்.

2G இணையத்தைவிட 4G இணையம் வேகமானதாகவும் மக்களுக்குப் பயனுள்ளதாக இருந்தாலும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டியது அவசியம் என்று நீதிபதி ரமணா சுட்டிக்காட்டினார். "4G இணையச் சேவையை அனுமதிப்பது தீவிரவாத நடவடிக்கைகளை மேலும் எளிதாக்கும்" என அரசு சார்பில் கூறப்பட்டது.

supreme court
supreme court

மனுதாரர்கள் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஹுசெபா அஹ்மதி, 4G வேக இணையச் சேவையை அனுமதிக்க மறுப்பது மக்களின் அடிப்படை உரிமையான பேச்சுரிமையை மறுப்பதற்குச் சமமாகும் என்றும், இணைய சேவையே இல்லாத பகுதிகளில்கூட பெரும்பாலான பயங்கரவாத செயல்கள் நடைபெற்றுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்,

ஊரடங்கு நேரத்தில் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளைப் பெறுவதற்கு இணையதளம் அவசியம் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளும் ஆன்லைன் மூலம் பெறும் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டது.

Telecom
Telecom

மத்திய மற்றும் மாநில அரசின் இணையதள வேகக் கட்டுப்பாடுகள் கொரோனா பாதிப்புகளைக் குறைக்கும் ஊரடங்கு மற்றும் ஆன்லைன் கல்வி போன்றவற்றை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று அரசு சார்பில் வாதிட்டனர். இறுதியாகக் காஷ்மீரில் 4G சேவையை அனுமதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

தற்போது இணையதள பயனர்களுக்கு 2G வேகத்தில் மட்டுமே இணையச் சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பானதாக அரசு கருதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தளங்களை மட்டுமே மக்கள் பயன்படுத்தமுடியும். ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களுக்கான தடை தொடர்கிறது.

அடுத்த கட்டுரைக்கு