Published:Updated:

ஜாமியா போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு? - மாணவர்கள் குற்றச்சாட்டும் காவல்துறை விளக்கமும்!

குடியுரிமைப் போராட்டம்
குடியுரிமைப் போராட்டம் ( AP )

டெல்லியில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கி பயன்படுத்தியதாகவும் அதனால் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பான போராட்டங்களால் கடந்த ஒரு வாரமாக வட கிழக்கு இந்தியா முழுவதும் ஸ்தம்பித்துள்ளது என்றே கூறவேண்டும். நேற்று முன் தினம் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சாதாரண போராட்டமாகத் தொடங்கிய இதில் திடீர் கலவரம் ஏற்பட்டதால் தடியடி, கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு, பேருந்துகள் எரிப்பு போன்ற பல்வேறு சம்பவங்கள் நடந்தன.

குடியுரிமைப் போராட்டம்
குடியுரிமைப் போராட்டம்
AP

இந்தக் கலவரத்தில் போலீஸ்காரர்களே பேருந்துகளுக்குத் தீவைத்ததாகவும், அவர்கள் கல்லூரிக்குள் நுழைந்து தங்களை சரமாரியாகத் தாக்கிக் கைது செய்ததாகவும் மாணவர்கள் காவல்துறையினர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். ஆனால் `மாணவர்கள் எரித்த பேருந்துகளைத்தான் நாங்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தோம்’ எனக் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ளது டெல்லிக் காவல்துறை.

இந்நிலையில் தற்போது, சில ஜே.எம்.இ மாணவர்கள் குண்டடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலில் காயமடைந்து பல மாணவர்கள் டெல்லி அரசு நடத்தும் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் அஜாஸ் மற்றும் சோயிப் கான் ஆகிய இரு மாணவர்களும் குண்டடிபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமைப் போராட்டம்
குடியுரிமைப் போராட்டம்
AP

``கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணிக்கு சில மாணவர்கள் வந்தனர். அவர்களுக்கு நடந்த மருத்துவப் பரிசோதனையில் அவர்களில் ஒருவருக்குக் குண்டடிபட்டுள்ளது. அந்த மாணவர் தற்போது ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது. குண்டடிபட்ட மாணவர் போராட்டத்தில் கலந்துகொண்டாரா அல்லது வேறு யாரேனும் அவரைச் சுட்டனரா என்ற விவரம் தெரியவில்லை” என்று மருத்துவர் சுனில் குப்தா கூறியுள்ளார்.

`நாட்டில் இருக்கவே பயமா இருக்கு!’ -நள்ளிரவில் நடந்ததைக் கண்ணீருடன் விவரிக்கும் மாணவி #JamiaProtest

மாணவர் அஜாஸின் மார்பை குண்டு துளைத்துள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதேபோல் சோயிப் கானின் காலில் குண்டடிபட்டுள்ளது. இது தொடர்பாக இரண்டு வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டு அதிக கவனம் பெற்றுள்ளது. மேலும், மருத்துவர்கள் எழுதும் அறிக்கையிலும் இரண்டு மாணவர்கள் குண்டடிபட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியுரிமைப் போராட்டம்
குடியுரிமைப் போராட்டம்
AP

இது பற்றி விளக்கமளித்துள்ள தென் கிழக்கு டெல்லிக் காவல்துறை அதிகாரி சின்மோய் பிஸ்வால், ``நோயாளிகள் கூறும் உடல் பிரச்னைகளைத்தான் மருத்துவ அறிக்கையில் இடம் பெறும் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் குண்டடிபட்டுள்ளதாகக் கூறப்படும் இரண்டு மாணவர்களுக்கும் கண்ணீர்ப் புகைக்குண்டின் முனைகள் பட்டிருக்கலாம். ஆனால், அன்று நடந்த போராட்டத்துக்குக் காவலர்கள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்லவில்லை. ரப்பர் குண்டுகள் கூட பயன்படுத்தப்படவில்லை. மாணவர்கள் போராட்டம் எப்படி இருந்தது என அங்கிருந்தவர்களுக்குத் தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு