Published:Updated:

`இனி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கைவிட பெரியதாக இருக்கும்!'- விவரித்த இந்திய ராணுவத் தளபதி

``தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. அவர்களின் தாக்குதல்களை எப்படி முறியடிப்பது என்பது நமக்குத் தெரியும்.''

Bipin Rawat
Bipin Rawat ( twitter )

பால்கோட் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் அம்மாநிலப் பகுதிகளில் கூடுதல் பதற்றம் நிலவிவந்தது. இந்தப் பதற்றம் தற்போது ஓரளவு தணிந்துள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஆலந்தூர் அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இளம் அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தப்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத்.

Bipin Rawat
Bipin Rawat
ani

அப்போது, பேசியவர், ``காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளுக்கும் அவர்களை இயக்குகின்ற பாகிஸ்தான் அமைப்புகளுக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்களுக்கு இடையேயான தகவல் தொடர்பில் எந்தவித பாதிப்பும் இல்லை. காஷ்மீரில் பொதுமக்கள் வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளது எனக் கூறுவதை நான் மறுக்கிறேன். தொழில், வர்த்தகம் என அம்மாநில மக்களின் வாழ்க்கை வழக்கம்போல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பால்கோட் தாக்குதலில் சேதமடைந்த தீவிரவாத முகாம்களை பாகிஸ்தான் சீரமைத்துள்ளது. அந்த தீவிரவாத முகாம்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. தீவிரவாதிகள் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைய முயற்சி செய்து வருகின்றனர். அவர்களை நுழைய வைக்கவே பாகிஸ்தான் ராணுவத் தரப்பில் இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. அவர்களின் தாக்குதல்களை எப்படி முறியடிப்பது என்பது நமக்குத் தெரியும். சவால்களை எதிர்கொள்ள ராணுவம் எப்போதும் தயாராகவே இருந்து வருகிறது.

Bipin Rawat
Bipin Rawat
twitter

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்பதையும் தாண்டி இனி நடக்கலாம்" எனக் கூறியவரிடம், ``பால்கோட்டில் நடத்தப்பட்டதைப் போல மீண்டும் ஒரு தாக்குதல் பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்கள் மீது நடத்தப்படுமா'' எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ``ஏன் அதையே திருப்பிச் செய்ய வேண்டும். இனி அதைவிடப் பெரியதாகச் செய்யலாம். என்ன நடக்கப்போகிறது எனத் தெரியாமல் எதிரிகள் பயத்திலேயே இருக்கட்டும்" என்றார்.