Published:Updated:

`80 ஹாட்ஸ்பாட்... ஆனால், புதிதாக கொரோனாத் தொற்று யாருக்குமில்லை!’ - நம்பிக்கையளிக்கும் கேரளா

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா

இதுவரை 392 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக இப்போது 102 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் முதன்முதலில் கொரோனா பாதித்தது கேரள மாநிலத்தில்தான். அதே சமயம் கொரோனாவை திறம்பட சமாளித்து முன்மாதிரியாகத் திகழ்ந்துவருகிறது. இதுவரை 494 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறை, மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை என அனைத்தும் ஒரே முகமாகச் செயல்பட்டு, இப்போது 102 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மேலும், ஒன்றரை லட்சத்தைத் தொடும் அளவிற்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இருந்தனர். அது இப்போது 21,499 ஆக குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாது புதிய நோய்த் தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. நோயிலிருந்து மீண்டு வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் இப்போது வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கே கொரோனா பாதிப்பு உள்ளதாகக் கேரள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதிலும், காடுகள் வழியாகப் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கேரளாவுக்குள் வருவதாகக் கூறிய முதல்வர் பினராயி விஜயன் வனத்துறை மற்றும் காவல்துறை மூலம் வனத்தில் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.

ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கே.கே.சைலஜா
ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கே.கே.சைலஜா

இந்த நிலையில் நேற்று கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று யாருக்கும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ``கேரளாவில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. அதே சமயம் 9 பேர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 392 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக இப்போது 102 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரள மாநிலம் முழுவதும் 21,499 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் 21,067 பேர் வீடுகளிலும், 432 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா அறிகுறிகளுடன் இன்று 106 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 27,150 பேரின் உமிழ் நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 26,225 பேருக்கு நோய் தொற்று இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சுகாதாரத்துறையினர், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக தொடர்பு அதிகமுள்ள நபர்களில் 1,862 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 999 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. கேரளாவில் இன்று புதிதாக 10 நோய் தீவிரம் அதிகமாக உள்ள பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கேரளாவில் நோய் தீவிரம் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு