Published:Updated:

`சம்பளம் கொடுக்கக்கூட நிதியில்லை..!’ - மத்திய அரசின் உதவிகோரும் டெல்லி அரசு

மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியா

``ஒவ்வொரு மாதமும் டெல்லி அரசுக்கு, தனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் அலுவலகம் தொடர்பான செலவுகளைச் சமாளிக்கவும் சுமார் ரூ.3,500 கோடி தேவைப்படுகிறது.”

கொரோனா தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. இதனால், பல மாநில அரசுகளும் மத்திய அரசிடம் நெருக்கடிகளைச் சமாளிக்க உரிய நிதியுதவிகளை வழங்க வேண்டும் எனக் கோரிக்கைகளை விடுத்து வருகிறது.

இந்தநிலையில் டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க போதிய நிதி இல்லை என்றும் இந்த நிதி நெருக்கடிகளைச் சமாளிக்க ரூபாய் 5,000 கோடியை மத்திய அரசு டெல்லிக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்,

டெல்லி
டெல்லி

இன்று செய்தியாளர்களிடம் பேசிய மணீஷ் சிசோடியா, ``ஒவ்வொரு மாதமும் டெல்லி அரசுக்கு, தனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் அலுவலகம் தொடர்பான செலவுகளைச் சமாளிக்கவும் சுமார் ரூ 3,500 கோடி தேவைப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் ஜி.எஸ்.டி-யின் மூலமாகத் தலா ரூ.500 கோடி அளவில் வசூலாகியுள்ளது. மற்ற ஆதாரங்களின் வழியாக வந்த பணத்தையும் இணைத்து அரசிடம் ரூபாய் 1,735 கோடி உள்ளது. ஆனால், இரண்டு மாதங்களையும் சேர்த்து எங்களுக்கு தற்போது ரூபாய் 7,000 கோடி தேவைப்படுகிறது. எனவே, மத்திய அரசு ரூபாய் 5,000 கோடி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

பேரிடர் நிவாரணத்தின் கீழ் மத்திய அரசு எந்தவிதமான உதவியும் எங்களுக்கு வழங்கவில்லை என்பதையும் துணை முதலமைச்சர் குறிப்பிட்டார். மேலும், ``டெல்லி அரசின் முன் உள்ள தற்போதைய பிரச்னை ஊழியர்களுக்கு எவ்வாறு சம்பளம் வழங்குவது என்பதுதான்” என்றும் கூறியுள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், ``பேரழிவு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் டெல்லியில் உள்ள மக்களுக்கு உதவி செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மணீஷ் சிசோடியாவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு காரணமாக டெல்லி அரசாங்கத்தின் வரி வசூல் சுமார் 85 சதவிகிதம் குறைவாகவே உள்ளது. மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள பேரிடர் நிதியைப்போல டெல்லி அரசு எந்த நிதியும் பெறவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

நிதி நெருக்கடிக்கு அழைத்துச்செல்லும் கொரோனா... தப்பிக்க மத்திய அரசு அவசியம் செய்ய வேண்டியவை!
அடுத்த கட்டுரைக்கு