Published:Updated:

`ஹாட்ஸ்பாட் லிஸ்டில் நீக்கப்பட்ட 56 பகுதிகள்; புதிய பாதிப்புகள் இல்லை!’ -முன்னேற்றப் பாதையில் கேரளம்

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா

கொரோனா ஹாட்ஸ் ஸ்பாட் லிஸ்டில் இருந்து 56 பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது 33 பகுதிகள் மட்டுமே ஹாட்ஸ் ஸ்பாட்டாக உள்ளன.

இந்தியாவில் முதன் முதலில் கொரோனா பாதித்த கேரள மாநிலம் இப்போது படிப்படியாக கொரோனாவிலிருந்து மீண்டு வருகிறது. `பிரேக் த செயின்' என்ற திட்டம் மூலம் பொது இடங்களில் கைகழுவ ஏற்பாடு செய்து வைத்ததுடன் கைகழுவ வேண்டியதன் அவசியத்தை முதன் முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது கேரள அரசு. காசர்கோடு அரசு மருத்துவமனை கொரோனாவுக்கான சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.

அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக `சமுதாய கிச்சன் என்ற திட்டம்' ஏற்படுத்தப்பட்டது என அனைத்து விதத்திலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கொரோனா இல்லாத நிலையை நோக்கிப் பயணிக்கிறது கேரளம். அதிலும் ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையை மாற்றி இன்று மாநிலம் முழுவதும் வெறும் 25 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளது.

ஆரோக்கிய போர்ட்டல் இணையதளத்தை தொடங்கிவைக்கும் கே.கே.சைலஜா டீச்சர்
ஆரோக்கிய போர்ட்டல் இணையதளத்தை தொடங்கிவைக்கும் கே.கே.சைலஜா டீச்சர்

இந்த நிலையில், நேற்று கேரளத்தில் ஒருவருக்குக் கூட புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. அதேசமயம் ஏழுபேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இன்றும் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில், கேரள சுகாதாரத்துறை சார்பில் `ஆரோக்கிய போர்ட்டல்' என்ற பெயரில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில் கொரோனா நோய் குறித்த அனைத்துத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா டீச்சர் கூறுகையில், ``கேரள ஆரோக்ய போர்ட்டல் என்ற இணையதளத்தில் சுகாதாரத்துறை சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளலாம். நீண்ட ஆலோசனைக்குப் பிறகுதான் சுகாதாரத்துறை இந்த இணையதளத்தை வடிவமைத்துள்ளது. இந்த இணையதளம் எல்லாவற்றுக்கும் முன்மாதிரியாக இருக்கும். கேரளத்தின் கொரோனா நிலவரம், சிகிச்சைக்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இதில் அப்டேட் செய்யப்படும்.

கே.கே.சைலஜா டீச்சர்
கே.கே.சைலஜா டீச்சர்

கேரளத்தில் நேற்றும், இன்றும் ஒருவருக்குக் கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இது சற்று ஆறுதலான விஷயம். இன்று ஐந்துபேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த மே 1-ம் தேதி, 3, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் ஒருவருக்குக் கூட கொரோனா பாசிட்டிவ் இல்லை. இதுவரை 502 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் 474 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இப்போது 25 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலம் முழுவதும் 16,693 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். அதில் 310 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா ஹாட்ஸ்பாட் லிஸ்டில் இருந்து 56 பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இனி 33 பகுதிகள் மட்டுமே ஹாட்ஸ் ஸ்பாட்டாக உள்ளன" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு