Published:Updated:

`யாரும் எங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை!’ -தொடரும் அவலநிலையால் கொதிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள் ( Representational image \ AP )

'மத்தியப் பிரதேச அரசு, உணவு உட்பட எந்த ஏற்பாடும் எங்களுக்கு செய்து தரவில்லை' என போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.

இந்தியாவில், கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இதைப்போலவே, ஊரடங்கு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தொடர்ந்து அதிகமான பிரச்னைகளைச் சந்தித்துவரும் தொழிலாளர்களின் நிலைமையும் தற்போது அதிக அளவில் விவாதிக்கப்பட்டுவருகிறது.

மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டு போக்குவரத்துகள் முடக்கப்பட்ட நாளிலிருந்து, பல தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான கி.மீ தூரங்களைத் தங்களது குழந்தைகளுடன் நடந்தே கடந்துவருகின்றனர். அந்தந்த மாநிலங்களில்... பாதிக்கப்பட்ட, இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, மாநில அரசுகள் தங்குமிடம் மற்றும் உணவுகளை ஏற்பாடு செய்தபோதிலும், அங்குள்ள மோசமான நிலைமைகளை சுட்டிக்காட்டி தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பக் கோரி போராட்டங்களை நடத்தினர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

தொழிலாளர்களின் போராட்டங்களைக் கருத்தில் கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது முடிவுகளில் சில மாற்றங்களைச் செய்தன. ரயில்வே துறையின் ஒத்துழைப்புடன் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்த முயற்சியிலும் அனுமதிச்சீட்டு பெறுவது, ரயில் பயணச்சீட்டு விலையேற்றம் என அதிக சிரமங்களைத் தொழிலாளர்கள் எதிர்கொண்டனர். இந்தப் பிரச்னைகளால் பல தொழிலாளர்கள் ரயில் பாதைகளிலும் சாலைகளிலும் பயணித்து விபத்துகளால் தங்களது உயிர்களையும் இழந்தனர்.

இதனையடுத்து, தொழிலாளர்கள் விஷயத்தில் மாநிலங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு குறித்தும் கேள்விகள் எழுந்தன. இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பாக இவ்வளவு பிரச்னைகள் நிகழ்ந்தபோதிலும், அவர்களுக்கான தீர்வுகள் என்பது இன்னும் தெளிவான நிலைக்கு வரவில்லை என்றுதான் பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

`மகனைக் கட்டியணைக்கணும்!’-இடம்பெயர்ந்த தொழிலாளிகளின் கண்ணீர் குரல்கள்

இந்நிலையில், இன்னும் தொழிலாளர்களின் போராட்டங்கள் பல இடங்களிலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ள செந்த்வா எனும் பகுதியில், நேற்று ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரண்டு, தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்தை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்தியப் பிரதேச அரசு உணவு உட்பட எந்த ஏற்பாடும் எங்களுக்கு செய்து தரவில்லை எனக் குற்றச்சாட்டுகளை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர் சைலேஷ் என்பவர் பேசும்போது, ``இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் தங்களது கைக்குழந்தைகளுடன் பயணம் செய்துவருகின்றனர். மகாராஷ்டிரா அரசு, எங்களை இங்கே அனுப்பியது. ஆனால், மத்தியப் பிரதேச அரசு எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. நேற்று இரவு முதல் பசியோடும் தாகத்தோடும் தவித்துவருகிறோம். எந்தப் பாதுகாப்பும் இல்லாத காட்டுப் பகுதியில் நாங்கள் இருக்கிறோம். யாரும் எங்களைப் பற்றி கவலைப்படவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்

போராட்டம் தொடர்பாகப் பேசிய அம்மாவட்ட ஆட்சியர் அமித் தோமர், ``பேருந்துகள் புறப்பட்டுச் சென்ற பின்னர், அவர்களுக்கு வேறு பேருந்துகள் கிடைக்க வாய்ப்பில்லை என அவர்கள் நினைத்ததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இதற்கு தீர்வு காண்பதாக நாங்கள் அவர்களுக்கு உறுதியளித்து, அவர்களை சமாதானப்படுத்தினோம்” என்று கூறினார்.

எல்லைப் பகுதியில் இருந்து, சுமார் 135 பேருந்துகளில் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெவ்வேறு மாவட்டங்களுக்கு இதுவரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், ``சொந்த வாகனங்களில் வருபவர்கள் மற்றும் நடை பயணமாக வருபவர்கள் என அனைவருக்கும் உணவு, தண்ணீர் மற்றும் தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகளை நிர்வாகம் வழங்குகிறது. அதேபோல நடந்து வருபவர்களுக்காகப் பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

`சூட்கேஸில் தூங்கும் சிறுவன்; உணவுக்கு சண்டையிடும் தொழிலாளர்கள்!' - லாக்டெளன் பரிதாபங்கள்
அடுத்த கட்டுரைக்கு