Published:Updated:

உ.பி: `உதவிக்கு யாரும் வரவில்லை!’ - மருத்துவமனை அலட்சியத்தால் உயிரிழந்த நோயாளி

மருத்துவர்கள்
மருத்துவர்கள் ( Claudio Furlan/LaPresse )

``என்னுடைய தந்தை இறந்துவிட்டார். மருத்துவமனை அலட்சியத்தால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துமனையில் நோயாளிகள் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்.”

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்த 57 வயதான நபர் ஒருவர் திடீரென மருத்துவமனையில் இருந்து வெளியேறி சென்றுள்ளார். அவர் வெளியே செல்வது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதையடுத்து பதற்றமடைந்த அவரின் உறவினர்கள் மற்றும் மருத்துவர்களை அவரை தேடி வந்துள்ளனர். காணாமல் சென்று 24 மணி நேரத்துக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலையில் இறந்த நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே இதற்கு காரணம என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை நிர்வாகம் வழக்கம்போல மறுத்துள்ளது.

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் இருந்த அந்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவமனையில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக உறவினர்களை நோயாளி செல்போனில் அழைத்துப் பேசியுள்ளார். இதுதொடர்பான ஆடியோவையும் உறவினர்கள் வெளியிட்டுள்ளனர். ஆடியோவில் நோயாளி பேசும்போது, ``இரவு முழுவதும் என்னுடைய நாக்கு வறண்டு போய் இருந்தது. எனக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இங்கே இருந்த சிலரிடம் உதவி கேட்க முயற்சி செய்தேன். ஆனால், ஒருவர்கூட அதைக் கவனிக்கவில்லை” என்று கூறுகிறார். இதையடுத்து சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் கொரோனா வார்டில் இருந்து அவர் வெளியே சென்றுள்ளார். 30 விநாடிகள் கழித்து சிலர் அவரைத் தேடி வெளியே செல்வதையும் சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன.

உ.பி அதிர்ச்சி: `ஒவ்வொரு முறையும் ரூ.30 லஞ்சம்!’ - ஸ்ட்ரெச்சரைத் தள்ளிய 6 வயதுச் சிறுவன்

அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் எஸ்.பி.சிங் இந்த பிரச்னை தொடர்பாகப் பேசும்போது, ``அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கு காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்னைகள் இருந்தது. உடல்நிலையும் சரியாகி வந்தது. ஆனால், அவர் திடீரென மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார். ஊழியர்கள் அவரைத் தடுக்க முயன்றனர். ஆனால், என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு முன்பு அவர் வெளியே சென்றுவிட்டார். நாங்கள் உடனடியாகக் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம்” என்று தெரிவித்தார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலையில் மருத்துவமனையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

கொரோனா
கொரோனா
மாதிரிப்படம்

நோயாளியின் மகள் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``என்னுடைய தந்தை இறந்துவிட்டார். மருத்துவமனை அலட்சியத்தால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் நோயாளிகள் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். என்னுடைய தந்தை வார்டில் இருந்து வெளியேறினார். யாரும் அதற்கு பொறுப்பேற்கவில்லை. பணம் செலுத்தப்படும் வரை யாரும் அவருக்கு உணவும் வழங்கவில்லை” என்று கவலையுடன் பேசியுள்ளார். அரசு மருத்துவமனையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த ஜூலை 18-ம் தேதியும் இதேபோன்ற சம்பவம் ஒன்று நடந்தது. இதுதொடர்பாக வெளியான வீடியோவில், கொரோனா வார்டில் உதவி கேட்டு நோயாளி ஒருவர் அழுகிறார். அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை. இறுதியில் அவர் உயிரிழந்தார். இந்தக் குற்றச்சாட்டையும் மருத்துவமனை மறுத்தது.

வைரஸ் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கிய நாள்கள் முதலே தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் மருத்துவமனைகள் மீது வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளின் மீது அதிக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஏழைகள் அதிகளவில் சிகிச்சை பெறப்போகும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியமாக இருப்பது தொடர்பாகவும் நோயாளிகளை தரக்குறைவாக நடத்துவதாகவும் வெளியாகும் தகவல்கள் பலரையும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது.

உ.பி அதிர்ச்சி: குழந்தையைத் தொட மறுத்த மருத்துவர்கள்! - உடலைக் கட்டியணைத்து அழுத தந்தை
அடுத்த கட்டுரைக்கு