Published:Updated:

`உணவு, தண்ணீர் இல்லாததால் தொழிலாளர்கள் இறக்கவில்லை!’ -உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய மத்திய அரசு

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

``சிறப்பு ரயில்களில் பயணம் செய்த சுமார் 80 தொழிலாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுதொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை”

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் ஏழை மக்களும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் அதிகளவில் பாதிப்படைந்தனர். வேலையிழப்பு, உணவின்மை, இருப்பிடம் இல்லாமை போன்ற காரணங்களால் பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்ல முயன்றனர்.

ஆனால், பொதுப் போக்குவரத்துகள் முடக்கப்பட்டதன் காரணமாக நடைப்பயணமாகவும் சைக்கிள் மற்றும் கிடைத்த வாகனங்களில் ஏறியும் பயணங்களைத் தொடங்கினர். பயணங்களின்போது ஏற்பட்ட விபத்துகள், பசி, வெப்பம் ஆகியவற்றின் காரணமாக தொழிலாளர்கள் இறந்தது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களின் வழியாகப் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தின.

புலம்பெயர் தொழிலாளர்கள்
புலம்பெயர் தொழிலாளர்கள்
AP

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னைகள் பற்றிய இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அஷோக் பூஷன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. தொழிலாளர்களின் அவலநிலைகளைச் செய்திகளின் வழியாக அறிந்த நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் மத்திய அரசு சார்பாக வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ``ஊரடங்கு காலத்தில் தண்ணீர், உணவு மற்றும் மருந்து ஆகியவற்றின் பற்றாக்குறைகளால் எந்த புலம்பெயர்ந்த தொழிலாளரும் உயிரிழக்கவில்லை. ஏற்கெனவே, அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால்தான் இறந்துள்ளனர். ஏறக்குறைய ஒரு கோடி தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். தற்போது எந்த மாநிலத்துக்கு வேண்டுமானாலும் ரயில்களை இயக்க மத்திய அரசு தயாராக உள்ளது” என்று கூறினார். மேலும், ``மாநில அரசுகளின் தனிமைப்படுத்தும் முறை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனவே, அதில் தலையிட வேண்டாம்” என்றும் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு நாளும் சுமார் 250 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது என்றும் இதுவரை 4,200-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன என்றும் மேத்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த சிறப்பு ரயில்கள் மூலமாக மட்டும் சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களது ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது

`பசியால் இறந்த தாய், அறியாத குழந்தை... மனதை உருக்குலைக்கும் வீடியோ!’- தொடரும் தொழிலாளர்களின் அவலநிலை

மூத்த வழக்கறிஞர் எம்.ஏ.சிங்வி பேசும்போது, ``சிறப்பு ரயில்களில் பயணம் செய்த சுமார் 80 தொழிலாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுதொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஊரடங்கு காலத்தில் மட்டும் 644 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது” என்று தெரிவித்தார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த தரவுகள் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பிய சிங்வி, சவால்களைச் சமாளிப்பதற்கு அரசு தயாராகவில்லை என்றும் குறிப்பிட்டார். மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் பேசும்போது, ``நிவாரண முகாம்களில் சுகாதாரம், உணவு மற்றும் தண்ணீர் குறித்த எந்தத் தகவல்களையும் அரசு வெளியிடவில்லை” என்று குறிப்பிட்டார். இதையடுத்து, தொழிலாளர்கள் பற்றிய விவரங்களைப் பதிவு செய்வது குறித்தும் கலவையான வாதங்கள் வைக்கப்பட்டன.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

விவாதங்களைக் கேட்ட நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷன் கவுல், எம்ஆர் ஷா அடங்கிய அமர்வு, ``தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அடுத்த 15 நாள்களில் அவர்களின் ஊர்களுக்கு அனுப்பி வைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தது.

மேலும், ``புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பற்றிய தகவல்கள் கிராமம், தொகுதி மற்றும் மாவட்ட அளவில் சேகரிக்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்குப் பயன்படும் வகையில் வேலைவாய்ப்புத் திட்டங்களைத் தொடங்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் வழங்க வேண்டும். அவர்களைச் சரியாக கவனித்துக்கொள்வது உங்களது கைகளில் உள்ளது” என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

`களைப்பால் தண்டவாளத்தில் தூக்கம்’ -14 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரைப் பறித்த காலி சரக்கு ரயில்
அடுத்த கட்டுரைக்கு