Published:Updated:

`அந்த வீடியோவை நன்றாகப் பாருங்கள்!’- பிரியங்கா காந்தி நிறுத்தப்பட்ட பின்னணியை விவரித்த உ.பி போலீஸ்

போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்ட முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியின் வீட்டுக்குச் சென்ற போது பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

`குடியுரிமை திருத்தச் சட்டம்’ - கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் வரை இந்த வார்த்தையை யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இன்னும் சொல்லப் போனால் இந்த வார்த்தையின் அர்த்தம் மற்றும் அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளைக்கூட யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால், கடந்த சில நாள்களாக இந்தியா முழுவதும் இந்த ஒரு வார்த்தைதான் அதிகமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் என நாடு முழுவதும் மக்கள் இந்தச் சட்டத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

போராட்டம்
போராட்டம்
AP

அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள் எனப் பலரது எதிர்ப்பையும் மீறி இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு அதற்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெற்றாகிவிட்டது. இந்த மசோதா நிறைவேற்றத்துக்குப் பிறகு வட கிழக்கு இந்தியா, டெல்லி, மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு போன்ற அனைத்து மாநிலங்களும் போராட்டக் களமாகியுள்ளன. தினம் தினம் ஏதாவது ஒரு மூலையில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் நடந்த குடியுரிமை சட்டத் திருத்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி எஸ்.ஆர் தாராபுரியின் குடும்பத்தினரைச் சந்திக்க, உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி நேற்று சென்றுள்ளார். ஆனால், பாதி வழியிலேயே அவரின் காரை தடுத்த போலீஸார், பிரியங்காவைச் செல்லவிடாமல் தடுத்துள்ளனர். பின்னர் அவர் தன் காரை விட்டு இறங்கி சாலையில் நடந்து சென்றுள்ளார். இதையடுத்து கட்சி நிர்வாகியுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போதும் விடாமல் துரத்திய போலீஸார் அடுத்த 2 கி.மீ தூரத்தில் மீண்டும் பிரியங்காவின் இரு சக்கர வாகனத்தையும் தடுத்துள்ளனர்.

இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. நடந்து சென்ற பிரியங்காவை ஒரு பெண் போலீஸ் இழுத்துத் தடுத்து நிறுத்தியுள்ளார். இந்தப் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

`இனி போராட்டக்காரர்கள் பயம் கொள்வர்; ஏனெனில் இங்கு யோகி உள்ளார்!’ - உ.பி அரசைச் சுற்றும் சர்ச்சை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாகப் பேசியுள்ள பிரியங்கா காந்தி, ``நான் முன்னாள் அதிகாரி தாராபுரியின் வீட்டுக்குச் செல்லும் வழியில் உத்தரப்பிரதேச காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டேன். இதையடுத்து நான் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தேன். பின்னால் வந்த காவல்துறையினர் என்னை வழிமறித்தனர். ஒரு பெண் போலீஸ் அதிகாரி என்னைக் கழுத்தைப் பிடித்து இழுத்தார். இன்னொருவர் என்னைக் கீழே தள்ளிவிட்டார். இதையடுத்து நான் நடந்தே சென்றேன்” எனக் கூறியுள்ளார். பிரியங்கா காந்தியைத் தடுத்த உ.பி போலீஸாருக்கும் அந்தப் பெண் காவலருக்கும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

பிரியங்காவை தடுத்த போலீஸ்
பிரியங்காவை தடுத்த போலீஸ்
ANI

இதற்கிடையில் தன் மீது எந்தத் தவறும் இல்லை தன் கடமையையே செய்ததாகப் பிரியங்கா காந்தியைத் தடுத்த பெண் அதிகாரி அர்ச்சனா சிங் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக லக்னோ போலீஸ் சூப்பிரண்டுக்குக் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். இது பற்றிப் பேசியுள்ள அர்ச்சனா, ``எங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை. லக்னோவில் பிரியங்கா காந்தியின் பாதுகாப்பு பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். அவரிடம் நான் தவறாக நடந்துகொள்ளவும் இல்லை. என் கடமையை மட்டுமே செய்தேன். இந்தச் சம்பவத்தின் போது நானும் கஷ்டப்பட்டேன்.

நேற்று மாலை 4:30 மணிக்கு பிரியங்கா காந்தி தன் அலுவலகத்தை விட்டு வெளியேறுவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அவர் காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து தன் இலக்கை நோக்கிச் செல்வதற்கு அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால், பிரியங்காவின் வாகனம் திடீரென வேறு திசையில் பயணித்தது. அவர் எங்கு செல்லவுள்ளார் என்பதை மட்டுமே நான் அறிய விரும்பினேன். அப்போதுதான் அவருக்கு எங்களால் முழுப் பாதுகாப்பு வழங்க முடியும்.

அர்ச்சனா சிங்
அர்ச்சனா சிங்

பிரியங்கா சிறப்புப் பாதுகாப்பு பிரிவில் உள்ளார். எனவே, அவரது பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டதாலேயே அவரை நிறுத்த நேரிட்டது. காவலர்கள் இல்லாமல் செல்வது அவருக்குப் பாதுகாப்பானது இல்லை. எங்கள் கேள்விக்கு நிர்வாகிகள் யாரும் பதிலளிக்கவில்லை. அந்த நேரத்தில்தான் பிரியங்கா வண்டியை விட்டு இறங்கி நடந்து சென்றார். பின்னர் பாதுகாப்பு இல்லாமல், ஹெல்மட் கூட அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார். இது தவறானது எனப் பிரியங்காவுக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை. அப்படியேதான் அதிகாரி தாராபுரி வீட்டுக்குச் சென்றார். வீடியோவை நன்றாகப் பாருங்கள் எங்கள் மீது தவறு எதுவும் இல்லை. நாங்கள் பிரியங்காவிடம் தவறாக நடந்துகொள்ளவும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு