Published:Updated:

`சிவப்பு மண்டலங்கள் இல்லை; 6 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்தில்..!’ - அசத்தும் வடகிழக்கு மாநிலங்கள்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

``33 மாவட்டங்களை உள்ளடக்கிய அஸ்ஸாமில் 30 மாவட்டங்கள் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது நம்பிக்கை ஏற்படுத்துவதாக உள்ளது.’’

நாடு முழுவதும் இரண்டாம்கட்ட ஊரடங்கு மே 3-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் மத்திய அரசு மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கினை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்த முறை நாட்டின் அனைத்து மாவட்டங்களும் கொரோனா பாதிப்பினை கணக்கில் கொண்டு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

நோயாளிகளின் எண்ணிக்கை, அது இரட்டிப்பாகும் விகிதம், பரிசோதனைகளின் அளவு மற்றும் கண்காணிப்பின் அடிப்படையில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் இப்பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 21 நாள்களாகப் புதிய கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டங்கள் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. சிவப்பு மண்டலங்களில் இருக்கும் மாவட்டங்களில் மக்கள் நடமாட்டம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் அதிக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் சில தளர்வுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட இப்பட்டியலில் வடகிழக்கில் எந்த மாவட்டமும் சிவப்பு மண்டலத்தில் சேர்க்கப்படவில்லை. இது அங்கிருக்கும் மக்களை நிம்மதி பெருமூச்சுவிடச் செய்திருக்கிறது.

அஸ்ஸாம் சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா
அஸ்ஸாம் சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா

அஸ்ஸாமில் 3 மாவட்டங்களும், திரிபுராவில் 2 மாவட்டங்களும், மேகாலயாவில் 1 மாவட்டமும் ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஏனைய மாவட்டங்கள் அனைத்தும் பச்சை மண்டலங்களாக உள்ளன.

``33 மாவட்டங்களை உள்ளடக்கிய அஸ்ஸாமில் 30 மாவட்டங்கள் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது நம்பிக்கை ஏற்படுத்துவதாக உள்ளது. 3 மாவட்டங்கள் மட்டுமே ஆரஞ்சு மண்டலங்களாக உள்ளது. சிவப்பில் ஒரு மாவட்டம்கூட இல்லை. இது உற்சாகமளிப்பதோடு எச்சரிக்கை விடுக்கும் விஷயமாகவும் உள்ளது. நாங்கள் இன்னும் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்" என ட்விட்டரில் அஸ்ஸாமின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாமில் இதுவரை பதிவான 42 கொரோனா பாசிட்டிவ் நோயாளிகளில் 29 நபர்கள் குணமடைந்துள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர். இதற்கு முன்பு அஸ்ஸாமின் கோலகத், நல்பாரி, துப்ரி, கோல்பரா, மொரிகோன் ஆகிய ஐந்து மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக இருந்தன. வியாழனன்று பொங்கைகோனில் 4 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அம்மாநில அரசு அம்மாவட்டத்தை சிவப்பு மண்டலமாக அறிவிக்க முடிவெடுத்தது. ஆனால், மத்திய அரசு நேற்று அறிவித்த பட்டியலில் அஸ்ஸாமின் மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்திருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

"பொங்கைகானில் நோயாளிகள் பதிவாகும் முன்பே மத்திய அரசு பட்டியல் தயாரித்த காரணத்தால் அம்மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் சேர்க்கப்படவில்லை. வரும் வாரங்களில் அது சிவப்பு அல்லது ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்படும்" எனச் சர்மா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

திரிபுரா முதல்வர் ஆலோசனை
திரிபுரா முதல்வர் ஆலோசனை

எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய திரிபுராவில் இரண்டு மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்திலும் மற்றவை பச்சை மண்டலத்திலும் உள்ளன. அங்கு பதிவான இரு நோயாளிகளும் தற்போது முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேகாலயாவில் பதிவாகியுள்ள 12 நோயாளிகளும் அம்மாநில தலைநகரான ஷில்லாங்கைச் சேர்ந்தவர்கள். எனவே, சில்லாங் இருக்கும் கிழக்கு காசி மலை மட்டுமே ஆரஞ்சு மண்டலமாக உள்ளது. மற்றவை பச்சை மண்டலமாக உள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்ற 11 நபர்களும் தற்போது குணமடைந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை செயலர் பிரீத்தி சுதன், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தற்போது வெளியிடப்பட்டுள்ள இப்பட்டியல் வாராந்தர அடிப்படையிலோ தேவை இருப்பின் அதற்கு முன்னதாகவோ திருத்தப்பட்டு வெளியிடப்படும் எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு