Published:Updated:

கொரோனாவால் இறந்தவர்களின் உடலை வீச மும்பையில் ஆறு எதுவுமில்லை! பாஜக-வுக்கு மும்பை மேயர் பதிலடி!

கிஷோரி பெட்னேகர்
கிஷோரி பெட்னேகர்

`மும்பையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை வீச ஆறு எதுவும் இல்லை’ என்று மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் கொரோனாவின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் கொரோனா இறப்புகள் மறைக்கப்படுவதாக பாஜக குற்றம்சாட்டிவருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் இரண்டு நாட்களுக்கு முன் அளித்திருந்த பேட்டியில், `மும்பையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளில் 40 சதவிகிதம் வேறு நோய்களால் இறந்ததாகக் கணக்கு காட்டப்படுகிறது’ என்றும், `மாநிலம் முழுவதும் கிராமங்களில் கொரோனா உயிரிழப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதே இல்லை’ என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

கிஷோரி
கிஷோரி

இதற்கு பதிலளித்துள்ள மும்பை மேயர் கிஷோர் பெட்னேகர், "கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்படுவதாகக் கூறப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லை. கொரோனா உயிரிழப்புகள் குறித்து மூன்று இடங்களில் பதிவு செய்யப்படுகிறது. எனவே கொரோனா உயிரிழப்புகளை மறைக்க முடியாது. உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் கங்கை ஆற்றில் கொரோனா நோயால் இறந்தவர்களின் உடல்கள் வீசப்படுகின்றன. ஆனால் அதுபோல கொரோனா நோயால் இறந்தவர்களின் உடலை வீச மும்பையில் ஆறு எதுவும் இல்லை. கொரோனா உயிரிழப்புகளை மறைக்கவில்லை. மறைக்கவும் முடியாது" என்று தெரிவித்தார். மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபேயும் கொரோனா உயிரிழப்புகளை அரசு மறைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "அரசு மருத்துவமனையில் ஏற்படும் உயிரிழப்புகள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஆனால் தனியார் மருத்துவமனையில் ஏற்படும் உயிரிழப்புகளை தனியார் மருத்துவமனைகள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்வதில்லை. அவ்வாறு உயிரிழப்புகளைப் பதிவுசெய்யாத மருத்துவமனைகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மும்பையில் மட்டும் கொரோனாவுக்கு 15,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டனர். ஆனால் மும்பை மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட்டு, கொரோனாவைக் கட்டுப்படுத்திவிட்டது. இதையடுத்து கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து மாநில அரசு பரிசீலித்துவருகிறது. கொரோனா பரவலின் அடிப்படையில் வாரம் ஒரு முறை கட்டுப்பாடுகளை மாநில அரசு தளர்த்திவருகிறது. மேலும் மும்பையில் மாநகராட்சி நிர்வாகம் 12 இடங்களில் 16 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க முடிவுசெய்துள்ளது. இதற்கு மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டது. இதில் மூன்று நிறுவனங்கள் பங்கேற்றிருந்தன. ஆனால் அவற்றில் இரண்டு நிறுவனங்களின் டெண்டர் தள்ளுபடி செய்யப்பட்டதால், இந்த விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் எந்தவித முடிவும் எடுக்காமல் இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு