Published:Updated:

`தனித்துவமான அனுபவம்!' - மோடியுடனான சந்திப்பு குறித்து அபிஜித் பானர்ஜி

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.

மோடியுடன் அபிஜித் பானர்ஜி
மோடியுடன் அபிஜித் பானர்ஜி

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜிக்கு 2019-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம் தொடர்பாக அடிக்கடி கேள்வி எழுப்பி வரும் இவர், பா.ஜ.க ஆட்சியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்தபோது விமர்சனங்களை முன்வைத்தார். `பா.ஜ.க-வின் பல திட்டங்கள் சிறப்பானவையாக இருந்தாலும் அதை நிறைவேற்றுவதற்கான வசதிகள் இப்போது இல்லை' என்பதே அபிஜித் வாதமாக இருக்கிறது. அபிஜித் பானர்ஜிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர், இந்தியா தரப்பில் அவருக்குத் தாமதமாக வாழ்த்து சென்றதும் சர்ச்சையைக் கிளப்பியது. அபிஜித் பா.ஜ.க-வுக்கு எதிரானவர் போன்றதொரு பிம்பம் உருவானது.

`தனித்துவமான அனுபவம்!' - மோடியுடனான சந்திப்பு குறித்து அபிஜித் பானர்ஜி

இந்த நிலையில் பிரதமர் மோடி - பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு டெல்லியில் இன்று நடந்தது. இந்தச் சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ``நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடனான சந்திப்பு மிகச் சிறப்பாக நடந்தது. அவரது சாதனைகளை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. பல்வேறு துறைகள் குறித்து ஆரோக்கியமான விவாதம் நடந்தது. அவரது எதிர்கால பணிகள் சிறக்க எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் அபிஜித் பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், ``பிரதமர் மோடி தொலைக்காட்சியில் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். நீங்கள் என்ன முயற்சி செய்கிறீர்கள் என்பது அவருக்குத் தெரிகிறது. நானும் அது தொடர்பாக எதுவும் சொல்ல மாட்டேன்.

`தனித்துவமான அனுபவம்!' - மோடியுடனான சந்திப்பு குறித்து அபிஜித் பானர்ஜி

சந்திப்பின் தொடக்கத்திலேயே பிரதமர் மோடி, தன் மீதான எதிர் கருத்துகளை தெரிவிப்பதற்காக ஊடகங்கள் உங்களுக்கு எப்படி வலைவிரிக்கும் என்பது குறித்து வேடிக்கையாகக் கூறினார்.

பிரதமருடனான இந்தச் சந்திப்பை சிறந்ததாகக் கருதுகிறேன். பிரதமர் எனக்காக நேரத்தை ஒதுக்கி நிறைய விஷயங்கள் குறித்துப் பேசினார். இந்தியா மீதான அவரது பார்வை தனித்துவமானது” என்றார்.