Published:Updated:

நஞ்சான காற்று! - நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 28 வயது டெல்லி பெண்

ராம் பிரசாத்

டெல்லியில் புகைபிடிக்கும் பழக்கம் இல்லாத 28 வயது இளம்பெண் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நுரையீரல் புற்றுநோய்
நுரையீரல் புற்றுநோய்

`காற்று மாசு’ இந்த வார்த்தையை சாதாரணமாக நாம் கடந்து சென்றுவிட்டால் அதன் வீரியத்தை நமது சந்ததியினர்தான் சந்திக்கப் போகின்றனர். தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. நீங்கள் தலைநகர் டெல்லியில் நிலவும் காற்று மாசினால் நீங்கள் புகைபிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் என எச்சரிக்கிறார் டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த் குமார். மார்பு அறுவை சிகிச்சை நிபுணராக அரவிந்த் ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் இதை தெரிவித்துள்ளார்.

அரவிந்த் குமார்
அரவிந்த் குமார்
ANI

டெல்லியில் காற்று கடுமையாக மாசுபட்டுள்ளது. புகைபிடிக்கும் பழக்கம் இல்லாத 28 வயது இளம்பெண் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருடைய குடும்பத்திலும் யாருக்கும் புகைபிடிக்கும் பழக்கம் இல்லை. காற்று மாசுபாட்டினால்தான் அந்தப்பெண்ணுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு புற்றுநோய் தாக்குதல் இருந்துள்ளது. ஆனால், காற்று மாசினால் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அந்தப் பெண்ணுக்குதான் ஏற்பட்டுள்ளது. காற்றுக்கு எந்த எல்லையும் கிடையாது. காற்று வீசும்போது அது தன்னுடன் மாசுபாட்டையும் சுமந்து செல்கிறது. அதன் பாதிப்பை எங்கு வேண்டுமானாலும் விட்டுச் செல்லும். சிகரெட்டில் இருக்கும் அதே நச்சு டெல்லியில் உள்ள காற்றில் கலந்திருக்கிறது. என அரவிந்த் கூறியுள்ளார்.

மருத்துவர் அரவிந்த் கூறிய பெண்ணுக்கு நுரையீரல் புற்றுநோய் நான்காம் கட்டத்தில் இருந்துள்ளது. நுரையீரல் புற்றுநோயானது 0-4 நிலைகளில் உள்ளது. நிலை பூஜ்ஜியத்தில் புற்றுநோய் அளவு சிறியதாக இருக்கும் நுரையீரல் மற்றும் திசுக்களில் பரவி இருக்காது. நிலை 1-ல் புற்றுநோய் பாதிப்பு இருக்கலாம், ஆனால் நிணநீர்க்கணுக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். நிலை 2-ல் புற்றுநோய் நிணநீர்க்கணுக்கள் மற்றும் மார்புச் சுவரில் பரவியிருக்கலாம். நிலை 3 என்பது புற்றுநோயில் கட்டத்தை குறிக்கிறது. இந்த நிலையில் நோயானது இதயம் மற்றும் உணவுக்குழாய் போன்ற உறுப்புகளுக்கு தொடர்ந்து பரவுகிறது. நிலை 4-ல்தான் இறுதிக்கட்டம். புற்றுநோய் அதன் தீவிர கட்டத்தை எட்டியிருக்கும். மற்ற உடல் பாகங்களில் இது பரவியிருக்கும். இந்த நிலையில், உள்ள நோயாளிகள் உயிர்வாழும் விகிதம் 10 சதவிகித்துக்கும் குறைவாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.

நஞ்சான காற்று! - நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 28 வயது டெல்லி பெண்

டெல்லியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் இந்த 4-ம் நிலையை எட்டியுள்ளார். டெல்லி காற்றில் 20 சிகரெட்டின் மாசு கலந்திருப்பதாகவும் நீங்கள் டெல்லியில் வசிக்கிறீர்கள் என்றால் நீங்கள் புகைபிடிக்காதவர்களாக இருக்க முடியாது என்கின்றனர் மருத்துவர்கள்.