Published:Updated:

`யாரை நம்பி யார் இருக்கிறார்கள்; சிந்தித்துப் பேசுங்கள்!'- கங்கனாவுக்கு சிசோடியா பதிலடி

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத் ( ANI )

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கருத்துக்கு டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா பதிலடி கொடுத்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான பாலிவுட் நடிகர்கள் வாய் திறக்காதது குறித்து கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிரடியாகக் கருத்துகளை வெளியிட்டார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி பட ஷூட்டிங்காக ஹைதராபாத் வந்த கங்கனா செய்தியாளர்கள் சந்திப்பில், ``பாலிவுட் நடிகர்கள் கோழைகள், அவர்கள் தினமும் 20 முறை கண்ணாடியில் தங்களைப் பார்த்துக்கொள்வர். நாங்களே கலைஞர்கள். `நாங்கள் ஏன் நாட்டை பற்றி கவலைப்பட வேண்டும்' என்பார்கள். சிலரோ இன்ஸ்டாகிராமில் பதிவுபோட்டால் மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள்” என்று கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

கங்கனாவின் இந்த துணிச்சலான பேச்சை நெட்டிசன்கள் பாராட்டி வந்தனர். இந்நிலையில், தற்போது அவர் போராட்டக்காரர்களை நோக்கி கேள்வி எழுப்பியது, கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. கங்கனா நடித்துள்ள `பங்கா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் பேசிய கங்கனா, ``போராட்டத்தில் ஈடுபடுவோர் வன்முறையில் ஈடுபட மாட்டோம் என்பதை முதலில் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 3 முதல் 4 சதவிகிதம் பேர் மட்டுமே வரி செலுத்துகின்றனர். மற்றவர்கள் எல்லாம் அவர்களைச் சார்ந்தே இருக்கின்றனர். நிலைமை இப்படி இருக்கும்போது பேருந்து, ரயில்களை எரிக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது” என்று கேள்வியெழுப்பினார். வரி செலுத்துவோர் தொடர்பான கங்காவின் இந்தக் கருத்து விமர்சனத்துக்குள்ளானது.

டெல்லி துணை முதல்வர் சிசோடியா தனது ட்விட்டர் பதிவு மூலம் கங்கனாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். ``வன்முறையில் ஈடுபடுவதும் பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவதும் தவறு. இந்தத் தேசமானது வரி செலுத்தும் 3 சதவிகிதத்தினரை மட்டுமே நம்பி இல்லை. இந்தத் தேசத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் வரி செலுத்துகின்றனர். கூலித் தொழிலாளி முதல் கோடீஸ்வரர்கள் வரை வரி செலுத்துகின்றனர். சந்தையில் மலிவாகக் கிடைக்கும் தீப்பெட்டி, உப்பு பாக்கெட்டுகளைக் கூலித் தொழிலாளிகள் வாங்கும்போது மறைமுக வரி செலுத்துகிறார்கள். படம் பார்க்கச் செல்லும்போது கூட வரி செலுத்துகிறார்கள். நடிகர்களின் வருமானத்தில்கூட அவர்களின் பங்கு இருக்கிறது. யார் யாரைச் சார்ந்திருக்கிறார்கள் என்பதை இப்போது யோசித்துப் பாருங்கள்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு