Published:Updated:

``காஷ்மீர்... வரம்பை மீறிச் செயல்பட்டுள்ளார் பிரஸ் கவுன்சில் தலைவர்!" - என்.ராம்

பத்திரிகை சுதந்திரம் தொடர்பான வழக்கு விசாரணையில் தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என பிரஸ் கவுன்சில் தலைவர் சி.கே.பிரசாத் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

என்.ராம்
என்.ராம்

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் செயல்படுவதிலும் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் அனிருத்தா பாசின், காஷ்மீரில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம் மத்திய அரசு இதில் பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பிய பிறகு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணையில் தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என பிரஸ் கவுன்சில் தலைவர் சி.கே.பிரசாத் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் `காஷ்மீரில் ஊடகங்களுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை நியாயப்படுத்தி, தேசத்தின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் கருத்தில் கொண்டு இந்தக் கட்டுப்பாடுகள் அவசியம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை பிரஸ் கிளப்
சென்னை பிரஸ் கிளப்

இது பிரஸ் கவுன்சில் உறுப்பினர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் தரத்தை உயர்த்தவும் வேலை செய்வதற்காக நாடாளுமன்ற சட்டம் மூலம் உருவாக்கப்பட்ட பிரஸ் கவுன்சில் அமைப்பு பத்திரிகைச் சுதந்திரத்தைப் பறிக்கும் விதமாக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு ஆதரவாகச் செயல்படுவது கடும் கண்டனங்களைக் கிளப்பியது.

பிரஸ் கவுன்சில் தலைவர் இதைத் தனிப்பட்ட முறையில் மற்ற உறுப்பினர்களைக் கலந்தாலோசிக்காமலே செயல்பட்டுவிட்டதாகவும், பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு பிரஸ் கவுன்சில் நியமித்துள்ள குழுவொன்று காஷ்மீர் சென்று கள நிலவரங்களை ஆராய்ந்து அளிக்கின்ற அறிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் எங்களுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துவோம். சி.கே.பிரசாத் தாக்கல் செய்துள்ள மனுவை பிரஸ் கவுன்சில் திரும்பப் பெற்றுக்கொள்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

பிரஸ் கவுன்சில் செயலைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பத்திரிகையாளர் என்.ராம், எழுத்தாளர் வ.கீதா, வழக்கறிஞர் அஜிதா, டி.எம்.கிருஷ்ணா மற்றும் முன்னாள் பிரஸ் கவுன்சில் உறுப்பினர் அமர்நாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதலில் பேசிய என்.ராம், ``பிரஸ் கவுன்சில் என்கிற அமைப்பே எந்தவொரு அதிகாரமும் அற்றதுதான். ஆனாலும் கடந்த காலங்களில் பல முற்போக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், தற்போது நடைபெற்றுள்ளது துரதிர்ஷ்டவசமானது. இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று. சி.கே.பிரசாத் தன்னுடைய தனிப்பட்ட வரம்பில் இதைச் செய்திருக்கலாம். ஆனால், பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ள ஓரிடத்தில் இருந்துகொண்டு தன்னுடைய கடமைக்கு எதிர்மறையாகச் செயல்பட்டுள்ளார்” என்றார்.

என்.ராம் டி.எம்.கிருஷ்ணா
என்.ராம் டி.எம்.கிருஷ்ணா

டி.எம். கிருஷ்ணா பேசுகையில், “காஷ்மீரில் நடைபெற்று வருபவையெல்லாம் மிகவும் திட்டமிட்டே நடக்கக்கூடியன. ஊடகங்களை முடக்க வேண்டும் என்பதும் அதன்மூலம் மக்களின் கருத்துக்களை முடக்க வேண்டும் என்பதே. பிரஸ் கவுன்சில் தன்னுடைய உண்மையான நோக்கத்திற்காக நிற்க வேண்டும். அனைத்து விதமான தகவல் தொடர்புகளையும் முடக்கிவிட்டு மக்களுக்காக நிற்கிறோம் என அரசு சொல்லிக்கொள்வது முரணாக உள்ளது” என்றார்.

எழுத்தாளர் வ.கீதா கூறுகையில், ”காஷ்மீரில் மத்திய அரசின் அனுகுமுறை என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தேச நலம், தேச பாதுகாப்பு, தேச இறையாண்மை என்பது அனைத்தும் அதன் மக்களுக்காகத்தான். மக்களை வீட்டுக்குள்ளும், ஊடகங்களை செயல்படவிடாமலும் முடக்கிவிட்டு யாருக்காக இந்த தேச நலனும் தேசப் பாதுகாப்பும்?. இதற்கு முன்னரும் காஷ்மீரில் பிரச்சனை இருந்தபோதிலும் சிவில் உரிமைகளுக்கு என்றுமே தடை இருந்ததில்லை. தற்போதைய நிலை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது” என்றார்.

முன்னாள் பிரஸ் கவுன்சில் உறுப்பினர் அமர்நாத் கூறுகையில், “பேச்சு சுதந்திரம் என்பதில் தகவலைப் பெறுவதற்கான உரிமையும் அடங்கும். ஒட்டுமொத்த தேசத்தின் மக்களையும் காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள விடாமல் தடுத்துவைத்திருக்கின்றனர். பிரஸ் கவுன்சில் தெளிவுடன் முடிவெடுக்க வேண்டும். அரசியல் நிர்பந்தங்களுக்கு கட்டுப்படக்கூடாது” என்றார்.

இந்த விவாதம் இன்னும் வலுக்குமென்றுதான் தெரிகிறது.