Published:Updated:

`சர்ச்சை வரைபடம்; வெளிநடப்பு!’ - எஸ்.சி.ஓ கூட்டத்தில் பாகிஸ்தானைச் சாடிய அஜித் தோவல்

பாகிஸ்தான் வரைபடம்
பாகிஸ்தான் வரைபடம்

இந்திய யூனியன் பிரதேசங்களான ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் குஜராத் மாநிலத்தின் சில பகுதிகளை இணைத்து பாகிஸ்தான் ஒரு புதிய வரைபடத்தை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி வெளியிட்டது.

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றுவருகிறது. இதில், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், காஷ்மீரைத் தங்கள் பகுதியுடன் இணைத்து பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் வெளியிட்ட வரைபடத்தால், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் எஸ்.சி.ஓ. அமைப்பு கூட்டத்திலிருந்து பாதியில் வெளிநடப்பு செய்தார்.

பாகிஸ்தான் ராணுவத்தால் எல்லையில் பல்வேறு அத்துமீறல்கள் நிகழ்த்தப்பட்டுவரும் நிலையில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் அந்நாடு ஊக்குவித்துவருவதாக இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அந்தப் பகுதி, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. அதன் பிறகு, ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் ஆசாத் காஷ்மீரையும் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) பகுதியில் பதற்றம் அதிகரித்தே காணப்படுகிறது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட முதல் ஆண்டு நிறைவை ஒட்டி, கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி இந்தியாவின் யூனியன் பிரதேசங்களான ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் குஜராத் மாநிலத்தின் சில பகுதிகளை இணைத்து பாகிஸ்தான் ஒரு புதிய வரைபடத்தை வெளியிட்டது.

அஜித் தோவல்
அஜித் தோவல்
ANI

அந்த அரசியல் வரைபடத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் வெளியிட்டார். அதில், தேசியப் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான அவரது சிறப்பு உதவியாளர் மொயீத் யூசுப் (Moeed Yusuf) உட்பட அமைச்சரவை மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில், ``காஷ்மீரிகளுக்கு சுயநிர்ணய உரிமையை அடைவதற்கான அரசியல் போராட்டத்துக்கான முதல்படியாக இந்த வரைபடம் இருக்கும்’’ என்று இம்ரான் கான் கூறியிருந்தார்.

அதற்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித்த இந்தியா,``இது சட்டபூர்வமாக செல்லுபடியாகாத ஒன்று. அரசியல் அபத்தத்துக்கான பயிற்சி" என்று கண்டனம் தெரிவித்திருந்தது.

Vikatan

இதையடுத்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள் கூட்டம், காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ரஷ்ய தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் நிகோலாய் பட்ரூஷேவ் (Nikolai Patrushev) தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் சாா்பில், தேசப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான சிறப்பு உதவியாளா் மொயீத் யூசுப், இந்தியா சாா்பில் அஜித் தோவல் மற்றும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் மொயீத் யூசுப் பேசும்போது, இந்திய நிலப்பகுதிகளை பாகிஸ்தானின் பகுதிகளாகச் சித்திரிக்கும் வரைபடங்களைக் காண்பித்துப் பேசினாா். அதற்கு அஜித் தோவல் கடும் எதிா்ப்பு தெரிவித்தாா். பாகிஸ்தானின் இந்தச் செயல், உறுப்பு நாடுகளின் எல்லைகளையும், இறையாண்மையையும் பாதுகாக்க வேண்டும் என்ற எஸ்.சி.ஓ அமைப்பின் விதிமுறைகளை அப்பட்டமாக மீறுவதாக இருக்கிறது என்று அஜித் தோவல் கடுமையாகச் சாடினாா். அப்போது, அந்த வரைபடத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று நிகோலாய் பட்ரூஷேவ் வலியுறுத்தியும், மொயீத் யூசுப் பொருட்படுத்தாமல் தொடா்ந்து பேசினாா்.

இதையடுத்து, கூட்டத் தலைவரிடம் இந்தியாவின் நியாயமான குற்றச்சாட்டையும் எதிா்ப்பையும் அஜித் தோவல் பதிவு செய்துவிட்டு கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறினாா்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இது குறித்து, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ``பாகிஸ்தானின் செயல் கூட்டத்தின் விதிகளை மீறியதாகும். நாங்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு, எங்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்காக கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தோம். இந்தக் கூட்டத்தின் நோக்கத்தையே தவறாக வழிநடத்தும் எண்ணத்துடன் பாகிஸ்தான் செயல்பட்டிருக்கிறது’’ என்று குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, கூட்டத்தில் கலந்துகொண்டதற்காகத் தனிப்பட்ட முறையில் அஜித் தோவலுக்கு, நிகோலாய் பட்ரூஷேவ் நன்றி தெரிவித்தாா். மேலும், பாகிஸ்தானின் செயலை ரஷ்யா ஆதரிக்கவில்லை; இது, எஸ்.சி.ஓ அமைப்பில் இந்தியாவின் பங்களிப்பில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தான் நம்புவதாகவும் அவா் கூறினாா்.

அடுத்த கட்டுரைக்கு