Published:Updated:

`குழந்தைகளை முத்தமிடக்கூட முடியாது!' - கேரள கொரோனா வார்டில் பணியாற்றிய செவிலியரின் அனுபவம்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

``தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் நாங்கள் உரையாடுவது மிகவும் அவசியமானது. ஏனெனில், தனிமை வார்டில் அவர் வேறு யாருடனும் பேசுவதற்கான வாய்ப்புகள் கிடையாது. தொலைபேசியில் மட்டுமே அவர்கள் பேச முடியும்."

கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் 25 செவிலியர்கள் அடங்கிய குழுவை உருவாக்கியது. அந்தக் குழுவில் ஒருவராக இருந்த செவிலியர் தற்போது அதிலிருந்து முழுமையாக வெளியேறி சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார். இந்தநிலையில், கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்தது குறித்த தன்னுடைய அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

கொரோனா
கொரோனா

``ஆரம்பத்தில் எங்களுக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது" எனப் பேசத்தொடங்கிய செவிலியர், ``நாங்கள் மனதளவில் தயாராக இருந்தோம். பாதுகாப்பு உபகரணங்களைக் கையாளும் பயிற்சி மற்றும் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களும் எங்களுக்கு வழங்கப்பட்டன. கேரள சுகாதாரத்துறையின் மீது முழுமையான நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்குள் நுழைந்த இரண்டு நாள்களுக்குப் பிறகு, அனைத்தும் சரியாக இருப்பதாக உணர்ந்தோம். நான் அந்தக் குழுவில் இடம்பெறும் அளவுக்கு அதிர்ஷ்டசாலியாக இருந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு உடைகளை அணிந்து தொடர்ந்து ஆறு மணிநேரம் அவர் வேலை செய்ததாகக் குறிப்பிட்டார். பின்னர், நான்கு மணி நேரமாக வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இடைவேளைகளும் இருந்துள்ளன. வேலை முடிந்த பிறகு அணிந்துள்ள பாதுகாப்பு உடையை உரிய கிருமி நாசினிகள் கொண்டு சுத்தப்படுத்துவதும் மருத்துவமனையிலேயே குளிக்க வேண்டும் என்பதும் கட்டாய விதியாக இருந்துள்ளது.

`2 நாளாக உணவில்லை; நடுரோட்டில் இறக்கிவிடும் அவலம்!' -கேரள மக்களுக்கு பினராயி `மனிதநேய' அறிவுரை

தனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன என்பதைக் குறிப்பிட்ட அவர், ``ஒரு குழந்தைக்கு 2 வயதுதான் ஆகிறது. நான் வீட்டுக்கு வந்ததும் என்னை அவர்கள் பற்றிக்கொள்வார்கள். ஆனால், அவர்களை முத்தமிட முயல மாட்டேன். ஆனால், குழந்தைகள் எப்போதும் என்னைச் சுற்றியபடியே இருப்பார்கள். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான பணிகளில் ஈடுபட்ட அனைவருமே தங்களுடைய மற்ற கடமைகளைச் செய்ய அனுமதிக்கப்படவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

சிகிச்சைப் பெற்று வந்த வைரஸ் தொற்று உடைய இளைஞரைப் பற்றிக் குறிப்பிட்டு பேசிய அவர், ``வுகானில் மருத்துவம் படித்துக்கொண்டிருந்த 23 வயது மாணவர் ஒருவர் திரும்பி வந்தபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதியானது. மருத்துவ மாணவராக இருந்ததாலோ என்னவோ சிகிச்சைக்கு முழுமையாக ஒத்துழைத்தார், பொறுப்புடன் நடந்துகொண்டார். அதுமட்டுமல்ல சீனாவின் மோசமான நிலைமையை அவர் பார்த்திருக்கக்கூடும். தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் நாங்கள் உரையாடுவது மிகவும் அவசியமானது. ஏனெனில், தனிமை வார்டில் அவர் வேறு யாருடனும் பேசுவதற்கான வாய்ப்புகள் கிடையாது. தொலைபேசியில் மட்டுமே அவர்கள் பேச முடியும். அவர் கடந்த மாதம் பிப்ரவரி 13-ம் தேதி குணமடைந்து வெளியே அனுப்பப்பட்டார்" என்று கூறினார்.

கொரோனா
கொரோனா

மேலும், ``அவர் முழுமையாகக் குணமடைந்து ஆரோக்கியமாக வெளியேறியதை நான் பார்த்தேன். கொரோனா வைரஸ் அச்சப்பட வேண்டிய நோய் அல்ல என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். சுகாதாரத்துறை பின்பற்றச் சொல்பவற்றை தயவு செய்து பின்பற்றுங்கள். அப்போதுதான் இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியும். கூட்டங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். வெளிநாடுகள் இருந்து திரும்பியவர்கள் வீடுகளில் தனிமையில் இருக்க வேண்டும். அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.

Source : NDTV

கொரோனா பாதிப்பு - நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி நாளை உரை #Corona #NowAtVikatan
அடுத்த கட்டுரைக்கு