``சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த நீதிமன்றங்கள், பல ஆணையங்கள் பரிந்துரை செய்தும் அரசு இதுவரை செய்ய மறுப்பது சிலரின் விஷமத்தனமான சூழ்ச்சியே" என்று, பேராசிரியர் யோகேந்திர யாதவ் மதுரையில் நடந்த கருத்தரங்கில் பேசியிருப்பதன் மூலம் சாதிவாரிக் கணக்கெடுப்பு கோரிக்கை வலுப்பெற்றுவருகிறது.
ஓ.பி.சி சாதிவாரிக் கணக்கெடுப்பை அரசு தொடங்க வேண்டும் என்று வட மாநிலங்களில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு அமைப்புகள் நீண்டகாலமாக வலியுறுத்திவருகின்றன.

நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீட்டில் சமமற்ற நிலை இருக்கிறது. அனைத்துச் சாதியினருக்கும் கல்வி, வேலைவாய்ப்புகள் மக்கள் தொகைக்கேற்ப சமமாகக் கிடைக்க வேண்டும். அதற்கு சாதிவாரியான கணக்கெடுப்பு அவசியம் என்று கோரிக்கை வைத்துவரும் தமிழ்நாட்டிலுள்ள பி.சி., எம்.பி.சி., டி.என்.டி சாதி அமைப்புகள், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆகஸ்ட் 8-ம் தேதி இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்த ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. அதற்கு முன்னோட்டமாக சர்வதேச மண்டேலா தினத்தில் 'சாதிவாரிக் கணக்கெடுப்பு அரசியல் அமைப்பின் ஆணை' என்ற தலைப்பில் கடந்த 18-ம் தேதி மதுரையில் கருத்தரங்கு நடத்தினர்.
இதில் ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் நிறுவனத் தலைவர் பேராசிரியர் யோகேந்திர யாதவ், முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், அப்துல் கலாமின் ஆலோசகர் வி.பொன்ராஜ், ஊடகவியலாளர் அய்யநாதன் ஆகியோர் இணையவழியாகக் கலந்துகொண்டு பேசினார்கள்.

யோகேந்திரா யாதவ் பேசும்போது, ``ஓ.பி.சி சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த மறுப்பது மிகப்பெரிய மோசடி. முழு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியவில்லையென்றாலும் சிறிய அளவிலாவது சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த நீதிமன்றங்கள், பல ஆணையங்கள் பரிந்துரை செய்தும் இதுவரை செய்ய மறுப்பது தேசத்தின் வளங்களையும் நலன்களையும் அனுபவித்துவரும் ஒரு சிலரின் விஷமத்தனமான சூழ்ச்சியே. எனவே, அனைத்து ஓ.பி.சி மக்களும் ஒன்றிணைந்து சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த அரசை வலியுறுத்த வேண்டும்" என்றார்.
சுதர்சன நாச்சியப்பன் பேசுகையில், "இந்திரா சஹானி தீர்ப்புக்குப் பிறகு சாதிவாரிக் கணக்கெடுப்பு மிக மிக அவசியமாகிறது. அரசியல், கல்வி, பொருளாதாரம், நீதிமன்றம் என எல்லா நிலைகளிலும் இதுவரை வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு உரிய வாய்ப்பு வழங்க சாதிவாரிக் கணக்கெடுப்பு காலத்தின் கட்டாயம். குற்றப்பரம்பரைச் சட்டம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பழங்குடி மற்றும் விளிம்புநிலைச் சமூகங்களுக்கு சமூகநீதி சென்றடைய உடனடியாக மத்திய, மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்" என்றார்.

அப்துல் கலாமின் ஆலோசகர் வி.பொன்ராஜ், "சென்சஸ் எடுப்பது மத்திய அரசின் பணி என்றாலும், அதைக் காரணம் காட்டி மாநில அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. புள்ளிவிவர சேகரிப்பு சட்டம் 2008-ன் படி மக்கள்தொகை உட்பட சமூக, கல்விநிலை குறித்த புள்ளிவிவரங்களைச் சேகரிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. காலம் கடத்தினால் தமிழ்நாடு அனுபவித்துவரும் 69 சதவிகித இட ஒதுக்கீடுக்கு ஆபத்தாக முடிந்துவிடும்" என்றார்
ஊடகவியலாளர் அய்யநாதன், "சமூகநீதியை ஒரு சமூகத்துக்கு மட்டும் வழங்குவதால், பல ஏழை, எளிய மக்கள் இதுவரை எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருக்கின்றனர். எனவே நெல்சன் மண்டேலா நிறவெறியை ஒழித்ததுபோல் இந்தியாவில் இருக்கும் சமூக அநீதியை அழிக்க சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம், அதை மறுப்பது ஏமாற்று வேலை" என்றார்.

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான கோரிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்துவருகிறது.