Published:Updated:

`பாத்திரங்கள் மூலம் ஒலி; 14 லட்சம் மெசேஜ்கள்;கட்டுப்பாட்டு அறைகள்!’- ஒடிசா அதிரடி நடவடிக்கை #Locust

வெட்டுக்கிளி
வெட்டுக்கிளி ( Retro Lenses )

``எங்கள் மாநிலத்துக்குள் வெட்டுக்கிளிகள் இன்னும் வரவில்லை. எனினும், தொடர்ந்து பூச்சிகள் வருகிறதா என்பதைக் கண்காணித்து வருகிறோம்”

கொரோனா, புயல், வெட்டுக்கிளி என இந்தியா பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவித்து வருகிறது. விவசாயிகள் மத்தியில் இந்த வெட்டுக்கிளி பிரச்னை இன்று அதிக பயத்தை ஏற்படுத்தியுள்ளது. பல லட்சம் ஏக்கர் உணவுப் பொருள்களைச் சேதப்படுத்தும் இந்த வெட்டுக்கிளிகள் எப்போது தங்கள் நிலத்துக்குப் படையெடுத்து வரும் என்பது தெரியாமலும் வரும்பட்சத்தில் என்ன செய்யப்போகிறோம் என்பது புரியாமலும் விவசாயிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த நிலையில், சத்தீஸ்கரிலிருந்து வெட்டுக்கிளிகள் படையெடுத்து வரும் என ஒடிசா அதிகாரிகள் அச்சப்படுவதால் இதுதொடர்பாக விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அம்மாநில அரசானது வாய்ஸ் மெசேஜ்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வெட்டுக்கிளி
வெட்டுக்கிளி

ஒடிசாவின் வேளாண் மற்றும் உணவு உற்பத்தித் துறையின் இயக்குநர் முத்துக்குமார் இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``வாய்ஸ் மெசேஜ் வழியாக 8 லட்சம் விவசாயிகளுக்கும் வாட்ஸ் அப்பில் டெக்ஸ்ட் மெசேஜ் வழியாக சுமார் 6.5 லட்சம் விவசாயிகளுக்கும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்த விழிப்புணர்வுச் செய்திகளை அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளது. விவசாயிகள் குழுக்களாக இணைந்து பூச்சிகளை விரட்ட பாத்திரங்கள் மற்றும் தகரப் பெட்டிகளை அடித்து ஒலிகளை எழுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். பூச்சிக்கொல்லி உள்ளிட்ட மருந்துகளையும் பயிர்களில் தெளிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். காற்றின் திசை காரணமாக வெட்டுக்கிளிகள் மத்தியப் பிரதேசத்துக்குத் திரும்பியுள்ளன. இருப்பினும் இவை ஒடிசாவுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் உள்ளன” என்று கூறியுள்ளார்.

10 நாள்களில் 5000 கிலோ மீட்டர் பயணித்த வெட்டுக்கிளிகள்... அதிர வைக்கும் வரலாற்றுப் பேரழிவுகள்!

தொடர்ந்து பேசிய அவர், ``ஆந்திரா, சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் எல்லையில் உள்ள பகுதிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. எங்கள் மாநிலத்துக்குள் வெட்டுக்கிளிகள் இன்னும் வரவில்லை. எனினும், தொடர்ந்து பூச்சிகள் வருகிறதா என்பதைக் கண்காணித்து வருகிறோம். தேவைப்படும் பட்சத்தில் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்க தீயணைப்புத் துறை வீரர்கள் உதவி செய்வார்கள். வெட்டுக்கிளிகள் வருகை தொடர்பான அறிக்கைகளை வழங்கவும் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளன. அதனடிப்படையில், அவற்றைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்குப் பயன்படும் வகையில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

வெட்டுக்கிளி
வெட்டுக்கிளி

ஒடிசாவிலுள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பவன் குமார் பேசும்போது, ``மிகவும் ஆபத்தான பகுதிகளில் வெட்டுக்கிளிகளைக் கொல்வதற்குப் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்க ட்ரோன்களைப் பயன்படுத்தலாம். வெட்டுக்கிளிகள் படையெடுப்பு பருவமழை மற்றும் காற்றின் திசையைப் பொறுத்தது” என்று கூறியுள்ளார்.

`படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்; அழிப்பிலும் ஆபத்து!’ - பாகிஸ்தான் சொல்லும் சிம்பிள் யோசனை #Locust
அடுத்த கட்டுரைக்கு