Published:Updated:

` 5 காரணங்கள்...ரூ.86,500 அபராதம்..!' - லாரி ஓட்டுநருக்கு அதிர்ச்சி கொடுத்த டிராஃபிக் போலீஸார்

சத்யா கோபாலன்

ஒடிசாவைச் சேர்ந்த ஒரு லாரி ஓட்டுநர் சாலை விதிகளை மீறியதாக அவருக்கு அபராதமாக ரூ.86,500 விதிக்கப்பட்டுள்ளது.

Truck - Reference photo
Truck - Reference photo

போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்பவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சமீபத்தில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி சாலை விதிகளை மீறுபவர்களுக்கு முன்னதாக வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையைவிட பத்து மடங்கு அதிகப் பணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நடைமுறை சில மாதங்களாக நாட்டின் பலவேறு மாநிலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Traffic - Reference photo
Traffic - Reference photo

இந்தநிலையில், ஒடிசாவில் அசோக் ஜாதவ் என்ற லாரி ஓட்டுநர் சாலை விதிகளை மீறியதால் அவருக்கு இந்தியாவிலேயே அதிகபட்ச அபராதத் தொகையாக 86,500 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3-ம் தேதி இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தாலும் அபராதத் தொகை ரசீது தற்போது வைரலாகியதால் இந்தச் செய்தி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுபற்றிப் பேசிய சம்பல்பூர் போக்குவரத்துத் துறை அதிகாரி லலித் மோகன், ``அசோக் ஜாதவ், அங்கீகரிக்கப்படாத ஒருவரை லாரி ஓட்ட அனுமதித்துள்ளார். அதற்கு அபராதமாக ரூ.5,000, லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியதற்காக ரூ.5,000, அனுமதிக்கப்பட்டுள்ள 18 டன் எடையைவிட அதிகமான எடையை லாரியில் ஏற்றி வந்ததற்காக ரூ.56,000, விதிகளை மீறி லாரியின் மேல் பெரிய பொருள்கள் கொண்டு சென்றதற்கு ரூ.20,000 மற்றும் பொதுவான குற்றங்களுக்கு ரூ.500 என மொத்தம் 86,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Traffic police -Reference photo
Traffic police -Reference photo

ஐந்து மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு லாரி ஓட்டுநர், அபராத தொகையைப் போக்குவரத்து காவலர்களிடம் செலுத்தியுள்ளார். நாகாலாந்தைச் சேர்ந்த பி.எல்.ஏ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த லாரியில் ஜே.சி.பி இயந்திரத்துடன் பொருள்கள் ஏற்றப்பட்டுள்ளன. இந்த வாகனம், ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தின் தல்ச்சர் நகரத்திலிருந்து சத்தீஸ்கர் செல்லும் வழியில் சம்பல்பூரில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.

போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகை உயர்வு! - விதிமீறலும் புதிய அபராதத் தொகையும்

போக்குவரத்து சட்டத் திருத்தம் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி ஒடிசாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது அமல்படுத்தப்பட்ட நான்கு நாள்களில் மட்டும் 88 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டு நாட்டிலேயே அதிக வசூல் அபராத தொகை வசூலான மாநிலமாக உள்ளது.

Traffic  - Reference photo
Traffic - Reference photo

இதே ஒடிசாவின் புவனேஷ்வரில் கடந்த வாரம் ஒரு ஆட்டோ ஓட்டுநர் லைசென்ஸ் இல்லாமல் ஆட்டோ ஓட்டியதால் அவருக்கு 47,500 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.