பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள அமியாவர் எனும் கிராமத்தில் ஆரா என்ற கால்வாய் மீது 12 அடி உயரமும் 60 அடி நீளமும் 500 டன் எடையும் கொண்ட இரும்பு பாலம் ஒன்று பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாடின்றி இருந்துள்ளது. 1972ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம் பழுதடைந்து இருந்ததால் அதன் அருகே கட்டப்பட்ட புதிய பாலத்தை மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் அரசு அதிகாரிகள் போல் வந்த மர்ம நபர்கள் மக்களிடம் தாங்கள் அரசு அதிகாரிகள் என்று அறிமுககப்படுத்தி மக்கள் உதவியுடன் 500 டன் எடைக் கொண்ட இரும்பு பாலத்தை ஜேசிபி, கேஸ் கட்டர்கள் போன்றவற்றைப் பயன்படுத்தித் தனித்தனியாகப் பிரித்து திருடிச் சென்றுள்ளனர். இதில் வியப்பு என்னவென்றால் இதை அவர்கள் மூன்று நாட்களாகச் செய்து கொஞ்சம் கொஞ்சமான மக்கள் முன்பே திருடிச் சென்றுள்ளனர். அங்கிருந்த மக்களும் பழுதடைந்த பாலத்தை அகற்றுகிறார்கள் என்று நினைத்துள்ளனர்.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல் அதிகாரிகள் சந்தேகத்தின் காரணமாக இது தொடர்பாக விசாரணை நடத்தி பின்பு வந்தவர்கள் அரசு அதிகாரிகள் அல்ல திருடர்கள் என உறுதி செய்து வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடிவந்தனர்.

பின்பு காவல்துறையின் விசாரணையில் தான் தெரியவந்தது இந்த திருட்டு அரசு அதிகாரி ஒருவரின் துணையில் நடந்தது என்று. இதையடுத்து இந்த சம்பத்தில் ஈடுபட்ட நீர்வளத் துறையின் துணைப் பிரிவு அதிகாரி (SDO) உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஜேசிபி இயந்திரம், திருடப்பட்ட 247 கிலோ இரும்புத் தடங்கள் மற்றும் பிற குற்றம் சம்பந்தப்பட்டப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கூறிய காவல்துறையினர், 'பாலம் திருடப்பட்டது தொடர்பாக நீர்வளத்துறை எஸ்டிஓ(SDO) அதிகாரி உட்பட 8 பேரை கைது செய்துள்ளோம். SDO உடன் இணைந்து திருடர்கள் பாலத்தை திருடிச் சென்றனர். ஒரு ஜேசிபி, திருடப்பட்ட சுமார் 247 கிலோ எடையுள்ள இரும்புகள் மற்றும் பிற பொருட்களை மீட்டுள்ளோம்' என்று கூறினர்.
