Published:Updated:

Petrol, Diesel Price: `சாதாரண மக்களுக்குப் பாதிப்பில்லை!' -அமைச்சர் தர்மேந்திர பிரதான்

அமைச்சர் தர்மேந்திர பிரதான்
அமைச்சர் தர்மேந்திர பிரதான்

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சாதாரண மக்களுக்குப் பாதிப்பில்லை என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார்.

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கிறார்கள். இதையடுத்து, பெட்ரோல், டீசல் தேவை வரலாறு காணாத அளவில் சரிவைச் சந்தித்தது. இந்த சூழலில் சர்வதேச சந்தையிலும் கச்சா எண்ணெய் விலை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவடைந்தது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வரும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 84 நாள்களாக அதன் விலையை மாற்றியமைக்கவில்லை.

சென்னை - முழு ஊரடங்கு
சென்னை - முழு ஊரடங்கு
தே.அசோக்குமார்

இந்தநிலையில், ஊரடங்கில் தளர்வுகள் விதிக்கப்பட்டதால் ஓரளவு போக்குவரத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடங்கப்பட்டது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலையை ஜூன் 7-ம் தேதி முதல் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தத் தொடங்கின. இந்த 23 நாள்களில் 22 முறை அதன் விலைகள் மாற்றியமைக்கப்பட்டன. உச்சக்கட்டமாகத் தலைநகர் டெல்லியில் பெட்ரோலைவிட டீசல் அதிக விலைக்கு விற்கப்படும் சூழல் ஏற்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாகப் பேசிய அவர், ``தேசிய பொருளாதாரம் மட்டுமல்லாது உலக பொருளாதாரமும் கொரோனா சூழலால் சவாலான நிலையில் இருக்கின்றன. இது, உலக அளவில் பெட்ரோல், டீசல் தேவையைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது.

பெட்ரோல் பங்க்
பெட்ரோல் பங்க்
Diesel Price: `19 நாள்கள்; லிட்டருக்கு ரூ.10.63!' -டெல்லியில் ரூ.80-ஐக் கடந்த டீசல் விலை

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பெட்ரோல், டீசல் தேவை 70 சதவிகிதம் குறைந்திருக்கிறது. இருப்பினும், பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதால், பெட்ரோல், டீசலின் தேவை இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில் பெட்ரோல், டீசல் விலையேற்றம் சாதாரண மக்களைப் பாதிக்கவில்லை. குடும்பத்தில் ஒரு பிரச்னை ஏற்படும் நிலையில், குடும்பத்தினர் எதிர்கால சவால்களைக் கருத்தில் கொண்டு நிதி விவகாரத்தில் திட்டமிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையேற்ற விவகாரம் இதைப் போன்றதுதான். அதற்கு விதிக்கப்படும் வரிகள் மூலம் சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் நாட்டு மக்களின் பொருளாதார பாதுகாப்பு ஆகியவற்றுக்கான திட்டங்களுக்குச் செலவிடப்படுகிறது. பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களின் மூலம் ரூ.1,70,000 கோடி நிதி அளிக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்

பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திவரும் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை விமர்சித்த அவர், ``ஏழை மக்கள் பயன்பெறுவதை சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை’’ என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு