Published:Updated:

மும்பை: தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர்; திடீரென புறப்பட்ட ரயில்! - மீட்ட ரயில்வே ஊழியர்கள்

ரயிலுக்கு அடியிலிருந்து முதியவர் மீட்பு
ரயிலுக்கு அடியிலிருந்து முதியவர் மீட்பு

மும்பையில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் இன்ஜினில் சிக்கிய முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மும்பை அருகிலுள்ள கல்யாண் ரயில் நிலையத்தில் ஹரிபிரசாத் என்ற 70 வயது முதியவர் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அவர் ரயிலைக் கடக்க முயன்ற நேரம் மும்பை-வாரணாசி ரயில் பிளாட்பாரத்திலிருந்து புறப்பட்டிருந்தது. இதை ஹரி பிரசாத் கவனிக்கவில்லை. ஆனால் அவரை கவனித்துவிட்ட ரயில்வே பராமரிப்பு ஊழியர்கள், ரயில்வே மோட்டார்மேனை நோக்கிச் சத்தம் போட்டு கத்தினர். உடனே மோட்டார்மேன் பிரதான், முதியவர் ஒருவர் ரயில் முன்பு வந்ததை கவனித்து உடனே பிரேக் போட்டார். ரயில்வே ஊழியர்கள் முதியவரிடம் கீழே படுக்கும்படி கத்தினர்.

ரயிலுக்கு அடியிலிருந்து முதியவர் மீட்பு
ரயிலுக்கு அடியிலிருந்து முதியவர் மீட்பு

முதியவரும் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் தண்டவாளத்தில் அப்படியே படுத்துவிட்டார். ரயில் இன்ஜின் முதியவர் படுத்திருந்த பகுதியைக் கடந்தே நின்றது. எனினும், அதிர்ஷ்டவசமாக அவருக்கு லேசான காயமே ஏற்பட்டது. ரயில்வே ஊழியர்கள் ரயில் தண்டவாளத்திலிருந்து முதியவரை பத்திரமாக மீட்டனர். நூலிழையில் முதியவர் உயிர் பிழைத்தார். சில நொடிகள் மோட்டார்மேன் தாமதித்திருந்தாலும் முதியவரை உயிரோடு பார்த்திருக்க முடியாது. ரயில்வே ஊழியர்கள் முதியவரிடம் ரயில் தண்டவாளத்தைக் கடக்கக் கூடாது என்று கவுன்சிலிங் கொடுத்து அனுப்பிவைத்தனர்.

துரிதமாகச் செயல்பட்டு, பிரேக் பிடித்து முதியவரைக் காப்பாற்றிய மோட்டார்மேன் பிரதான், ரவி ஆகியோருக்கு மத்திய ரயில்வே சன்மானம் அறிவித்துள்ளது. பயணிகள் ரயில் தண்டவாளத்தைக் கடப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய ரயில்வே கேட்டுக்கொண்டிருக்கிறது. மும்பையில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்தவருகிறது. இந்த மழையால் நகரில் புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் ரயில் நிலையங்களில் ரயில்களுக்காகப் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ரயில் போக்குவரத்து நிறுத்தம்
ரயில் போக்குவரத்து நிறுத்தம்

எனவே அதிகமானோர் ரயிலிலிருந்து இறங்கி நடந்து தண்டவாளத்தில் நடந்து செல்கின்றனர். மும்பையில் ஒவ்வோர் ஆண்டும் 3,000-க்கும் அதிகமானோர் மும்பை புறநகர் ரயில்களில் அடிபட்டு உயிரிழந்துவருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் ரயில் தண்டவாளத்தைக் கடப்பது, ரயிலிலிருந்து தவறி விழுவது போன்றவற்றால் உயிரிழந்துவருகின்றனர். அப்படி உயிரிழப்பவர்களில் பாதிப் பேர் அடையாளம் காணப்படாமலேயே ரயில்வே போலீஸாரால் தகனம் செய்யப்படுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு