Published:Updated:

`யானை கொல்லப்பட்டது கொடூரக் குற்றம்தான்.. ஆனால்?'- பா.ஜ.க குற்றச்சாட்டால் கொதித்த சிபிஎம், காங்கிரஸ்

பாதிக்கப்பட்ட யானை
பாதிக்கப்பட்ட யானை ( Facebook | Mohan Krishnan )

முதலில் கேரள மாநில மலப்புரத்தில் யானை அன்னாசி பழத்தில் வெடி மருந்து வைக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. பின்னர் யானை கொல்லப்பட்டது பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சைலன்ட் வேலி பகுதி என்று தெரிவிக்கப்பட்டது.

கேரள மாநிலத்தில் உணவுக்காக வனப்பகுதியைவிட்டு வெளியே வந்த கர்ப்பிணி யானை வெடிமருந்து வைக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டு உயிரிழந்த விவகாரத்தில் தற்போது மேலும் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. பழத்தில் வெடிமருந்து வைக்கப்பட்ட விவகாரத்தில் இன்று காலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கேரள வனத்துறை அமைச்சர் கே.ராஜு தெரிவித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட யானை
பாதிக்கப்பட்ட யானை
Facebook | Mohan Krishnan

யானை கொல்லப்பட்ட வழக்கு பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கும் நிலையில் மத்திய பா.ஜ.க அரசு இதற்கு மதச்சாயம் பூச நினைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால் இந்த விவகாரம் தொடர்பாக பேசுகையில், ``வனவிலங்குகள் என்ன காரணத்துக்காக கொல்லப்பட்டாலும் அது கொடூரக் குற்றம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பா.ஜ.க மூத்த தலைவரான மேனகா காந்தி, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரின் கருத்து, இந்தச் சம்பவத்துக்கு வகுப்புவாத நிறம் கொடுப்பதாக இருக்கிறது.

அன்னாசிப் பழத்தில் வெடி வைத்த கொடூரம்.. கர்ப்பிணி யானையின் இறுதி நிமிடங்கள்! -மனதை உலுக்கும் சம்பவம்

யானை கொல்லப்பட்ட சம்பவம் பாலக்காட்டில் நடைபெற்றிருந்த போதும் பா.ஜ.க-வினர் மற்றும் வலதுசாரி அமைப்புகள் இதை அண்டை மாவட்டமான மலப்புரத்தில் நடைபெற்றதாக குறிப்பிடுகிறார்கள். போலியான தகவல்களை வேண்டுமென்றே ஊக்குவிக்கும்விதமாக மலப்புரம் மாவட்டத்தைக் குறிப்பிடுகிறார்கள். மேலும், அவசியமே இல்லாமல் ராகுல் காந்தியையும் இழுக்கிறார்கள்” என்றார்.

தொடர்ந்து, `இதன்மூலம் பா.ஜ.க எந்த விவகாரத்தையும் அரசியல் காரணங்களுக்காக மாற்றி எடுத்துக்கொள்வார்கள் என்பது தெரிய வருகிறது. யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் அவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். ஆனால், மக்களை பிரித்து வைக்கும் அவர்களின் பிரசாரம் வெளிப்பட்டு விட்டது’ என்றார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அகமது பட்டேல், சிலர் பொய்யான தகவல்கள் மூலம் யானை கொல்லப்பட்ட விவகாரத்தை ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக திசைதிருப்புவதாக குற்றம் சாட்டினார்.

மேனகா காந்தி
மேனகா காந்தி

முன்னதாக பா.ஜ.க எம்.பி மேனகா காந்தி, `இதுபோன்ற சம்பவங்களுக்கு மலப்புரம் மிகவும் பிரபலம். இந்தியாவில் வன்முறை நிறைந்த மாவட்டமாக இருக்கிறது. உதாரணமாக சாலைகளில் விஷங்கள் தூவுவார்கள். 300 - 400 பறவைகள், நாய்கள் இதன்மூலம் ஒரேநேரத்தில் கொல்லப்படும் சம்பவங்கள் நடக்கும். கேரள அரசாங்கமும் மலப்புரம் பகுதியில் நடவடிக்கைகளை எடுப்பதில்லை. அவர்கள் அச்சப்படுகிறார்கள்’ எனக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

`கேரள அரசு அச்சப்படுகிறது; ராகுல் ஏன் மெளனமாக இருக்கிறார்?’ -யானை விவகாரத்தில் கொதித்த மேனகா காந்தி

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டரில், `கேரள மாநில மலப்புரத்தில் யானை கொல்லப்பட்டது தொடர்பாக மத்திய அரசு மிகத் தீவிரமாக கண்காணித்து வருகிறது. முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். விலங்குகளுக்கு வெடிமருந்துகளை கொடுத்துக் கொல்வது இந்திய கலாசாரத்திலேயே கிடையாது’ எனக் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய கேரள வனத்துறை அமைச்சர் கே. ராஜு, ``கர்ப்பிணி யானையைக் கொன்றதற்கு காரணமான குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு விஷயத்தை தெளிப்படுத்த விரும்புகிறேன். இந்தச் சம்பவம் நடைபெற்றது, மலப்புரத்தில் அல்ல பாலக்காட்டில்” என்றார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், `யானை இறந்தது மலப்புரத்தில் அல்ல; பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காட்டில். ஆனால், திட்டமிட்டு மத்திய அமைச்சர் உள்ளிட்டவர்கள் இத்தகைய பிரசாரத்தை செய்கின்றனர். இந்தப் பிரசாரம் மூலம் கேரளத்தையும் மலப்புரத்தையும் மோசமாகச் சித்திரிக்க முயல்கிறார்கள். இது சரியான வழிமுறை அல்ல. கேரளத்தின் உண்மைத்தன்மையைக் கேள்விக்குறியாக்க முயல்வதை அங்கீகரிக்க முடியாது’ என்றார் காட்டமாக.

முதலில் கேரள மாநில மலப்புரத்தில் யானை அன்னாசி பழத்தில் வெடிமருந்து வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது என்றாலும் பின்னர் யானை கொல்லப்பட்டது பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சைலன்ட் வேலி பகுதி என்று தெரிவிக்கப்பட்டது. இதைக் கேரள மாநில வனத்துறை அமைச்சரும் கேரள முதல்வரும் சொல்லிவிட்ட பிறகும் பா.ஜ.க-வினர் மலப்புரத்தைதான் டார்கெட் செய்கிறார்கள். மலப்புரம் மாவட்டம் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மாவட்டம் என்பதுதான் அதற்கான காரணமாக மற்ற கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

யானையின் உடலை ஆய்வு செய்த மருத்துவர்கள், யானை இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது என்கின்றனர். அதனால் யானை கடந்த நாள்கள் எங்கெங்கு சுற்றித் திரிந்தது என்ற அடிப்படையில் விசாரித்தால்தான் இந்தச் சம்பவம் நடைபெற்ற இடம் குறித்து தெரிய வரும் என்கிறார்கள். பாலகாடு, மலப்புரம் என இரண்டும் அண்டை மாவட்டங்கள் என்பதால் பிரச்னை இப்படி உருமாறியுள்ளது. பா.ஜ.க-வினர் உண்மை தெரியாமல் பேசியிருந்தால், திருத்திக் கொள்கிறேன் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் மறுப்பேதும் தெரிவிக்காமல் இருப்பது அவர்களின் நோக்கத்தைக் காட்டுவதாக குற்றம்சாட்டுகிறார்கள் எதிர்க்கட்சியினர்.

அடுத்த கட்டுரைக்கு