Published:Updated:

`அன்னாசிப் பழமல்ல... தேங்காய்; தேடப்படும் எஸ்டேட் உரிமையாளர், மகன்!’ -யானை மரணத்தில் என்ன நடந்தது?

பாதிக்கப்பட்ட யானை
பாதிக்கப்பட்ட யானை ( Facebook | Mohan Krishnan )

`இந்தக் குற்றத்தில் குறிப்பிட்ட மூவருக்கும் பங்கு இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. வில்சனை மட்டும் கைது செய்திருக்கிறோம். தலைமறைவாக இருக்கும் மற்ற இருவரையும் விரைவில் கைது செய்வோம்’ - போலீஸார்

கேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட வழக்கில் தினமும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆரம்பத்தில் யானை மலப்புரம் மாவட்டத்தில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், பின்னர் அது பாலக்காடு மாவட்டம் என்று மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அன்னாசிப் பழத்தில் வெடிமருந்து நிரப்பி யானைக்கு கொடுக்கப்பட்டதாகத் தவல்கள் வெளியான நிலையில், `யாரும் யானைக்கு கொடுத்திருக்க வாய்ப்பு இல்லை. காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட வெடிமருந்து நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தை யானை எடுத்து சாப்பிட்டு இருக்கலாம்’ என கேரள வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

`யானை கொல்லப்பட்டது கொடூரக் குற்றம்தான்.. ஆனால்?'- பா.ஜ.க குற்றச்சாட்டால் கொதித்த சிபிஎம், காங்கிரஸ்

மேலும், யானையின் உடலை ஆய்வு செய்த மருத்துவர்கள், யானை வெடிமருந்து நிரப்பப்பட்ட அன்னாசி பழம் சாப்பிட்டதற்கான சான்று இல்லை என்றும், அது உயிரிழப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்னர் இந்த வெடிப்பு நடந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இந்தத் தகவல்களின் அடிப்படையில் வனத்துறையும், காவல்துறையும் தீவிர விசாரணை மேற்கொண்டது.

இந்த நிலையில், நேற்று வில்சன் என்னும் ரப்பர் எஸ்டேட் ஊழியர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட விஷயத்தை காவல்துறையும் மாநில வனத்துறை அமைச்சரும் உறுதி செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ரப்பர் எஸ்டேட் உரிமையாளர் அப்துல் கரீம் என்பவரையும் அவரின் மகன் ரியாசுதீன் என்பவரையும் போலீஸார் தேடி வருவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட அந்த எஸ்டேட் அம்பலப்பரா என்னும் பகுதியில் இருக்கிறது. இது சைலன்ட் வேலி தேசியப் பூங்கா எல்லைப் பகுதியின் அருகிலேயே இருக்கிறது.

பாதிக்கப்பட்ட யானை
பாதிக்கப்பட்ட யானை
Facebook | Mohan Krishnan

இதுதொடர்பாக பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், `தேங்காயில் வெடிமருந்துகளை நிரப்பி, காட்டுப்பன்றிகளுக்காக வைத்திருக்கிறார்கள். இந்தக் குற்றத்தில் குறிப்பிட்ட மூவருக்கும் பங்கு இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. வில்சனை மட்டும் கைது செய்திருக்கிறோம். தலைமறைவாக இருக்கும் மற்ற இருவரையும் விரைவில் கைது செய்வோம்’ என்றனர். விசாரணையின் ஒரு பகுதியாக, வில்சனை குறிப்பிட்ட ரப்பர் எஸ்டேட்டுக்கு போலீஸார் மற்றும் வனத்துறை அழைத்துச் சென்றனர். அங்கு வெடிமருந்துகள் சட்டவிரோதமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து போலீஸார், `மரணமடைந்த யானை மே மாதம் 12-ம் தேதி வெடிமருந்து நிரப்பப்பட்ட தேங்காயை சாப்பிட்டுள்ளது. அதன் காரணமாக அதன் வாயில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. நாங்கள் சந்தேகிக்கும் நபர்களுக்கு, யானை காயமடைந்தது அன்றைய தினமே தெரியும். அடுத்த இரு வாரங்களுக்கு யானை அங்கும் இங்கும் சுற்றித் திரிந்திருக்கிறது. கடுமையான வலியால் உணவு உண்ண முடியாமலும், தண்ணீர் அருந்த முடியாமலும் சிரமப்பட்டுள்ளது. பின்னர் 25-ம் தேதி யானை வெள்ளியார் ஆற்றின் அருகே காயங்களுடன் காணப்பட்டது. பொதுமக்கள் தகவல் அளித்ததும் வனத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர்.

பாதிக்கப்பட்ட யானை
பாதிக்கப்பட்ட யானை
Facebook | Mohan Krishnan

இரண்டு கும்கி யானைகள் மூலம் யானையை மீட்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. கடைசியாக மே மாதம் 27-ம் தேதி யானை உயிரிழந்தது’ என்றனர்.

அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், ``இங்கு காட்டு யானைகள் மற்றும் பன்றிகள் அடிக்கடி வரும். பயிர்களை நாசம் செய்வதால் இது தொடர்பாக பலமுறை வனத்துறையிடம் முறையிட்டுள்ளோம். ஆனால் அதற்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய செயல்களைச் செய்ய மாட்டோம்” என்கின்றனர்.

`250 யானைகளுக்கு உடற்கூறாய்வு செய்திருக்கிறேன், ஆனால்’  -கர்ப்பிணி யானை மரணத்தால் கலங்கிய மருத்துவர்
அடுத்த கட்டுரைக்கு