Published:Updated:

தனிமை கண்காணிப்பு வளையத்தில் ஒருலட்சம் பேர் -கொரோனாவால் கலங்கும் கேரளம்!

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

கண்ணூரைச் சேர்ந்த மூன்றுபேர், வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் இப்போது டிச்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இப்போது சிகிச்சையில் 126 பேர் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து இரண்டாயிரத்து மூன்று (1,02,003) ஆனது. நேற்று ஒரே நாளில் 19 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பதாக சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. இதில் காசர்கோடு மாவட்டத்தில் மட்டும் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், "கேரளத்தில் மொத்தம் 137 பேருக்குக் கொரோனா பாதித்தது. அதில் 11 பேர் குணமடைந்து சென்றுவிட்டனர். முதலில் ஆறுபேர் டிச்சார்ஜ் ஆன நிலையில், கண்ணூரைச் சேர்ந்த மூன்றுபேர், வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் இப்போது டிச்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இப்போது சிகிச்சையில் 126 பேர் உள்ளனர்.

கொரோனா ஆய்வு
கொரோனா ஆய்வு

ஒரு லட்சத்து இரண்டாயிரத்து மூன்றுபேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். அதில் 601 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். கேரளத்தைச் சேர்ந்தவர்கள் வெளி மாநிலங்களிலும் வெளி வெளிநாடுகளிலும் உள்ளார்கள். அவர்கள் கொரோனாவைப் பற்றி அச்சம் தெரிவித்துள்ளனர். நீங்கள் உங்கள் உறவினர்கள் குறித்து அச்சப்பட வேண்டாம்.

இப்போது எங்கு இருக்கிறோமோ அங்கேயே இருப்போம் என பிரதமர் அறிவித்துள்ளார். கேரளத்திலிருந்து படிப்பதற்கும் வேலைக்கும் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சென்றவர்கள் இங்கு வரவேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் பயணம் செய்வதற்கு சாத்தியம் இல்லாமல் உள்ளது. நீங்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள், அரசு உங்களுடன் உள்ளது.

கொரோனா
கொரோனா

வாடகை வீட்டில் வசிப்பவர்களை இப்போது காலி செய்ய சொல்லக்கூடாது. கேரளத்தில் ரேஷன் கார்டு இல்லாத வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆதார் எண் ஆய்வுச் செய்யப்பட்டு உணவுப் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்

அடுத்த கட்டுரைக்கு