Published:Updated:

`மம்மா எங்கே..?!’ - பெற்றோர் கைதால் தவிக்கும் ஒன்றரை வயதுக் குழந்தை #CAA

ஒரு தாயின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. நான் முடிந்தவரை குழந்தை ஆர்யாவை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க முயற்சி செய்கிறேன்.

குழந்தை
குழந்தை ( hindustan times )

ஏக்தா சேகர் மற்றும் ரவி சேகர் ஆகிய இருவரும் சமூக ஆர்வலர்கள். வாரணாசியில் கடந்த டிசம்பர் 19-ம் தேதி குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 67 நபர்களுடன் இவர்களும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பு போராட்டம்
குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பு போராட்டம்

ஏக்தா மற்றும் ரவி ஆகியோருக்கு சம்பக் என்று செல்லமாக அழைக்கப்படும் ஆர்யா என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் ஆர்யா தற்போது ரவியின் சகோதரர் சசிகாந்த் மற்றும் தெபத்ரிதா ஆகியோரின் பராமரிப்பில் இருக்கிறார்.

தெபத்ரிதா இதுதொடர்பாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திடம் பேசும்போது, `` ஆர்யா தன்னுடைய அம்மாவையும் அப்பாவையும் தேடிக் கொண்டிருக்கிறாள். ஆர்யா, எனக்கு மிகவும் நெருக்கமானவள். ஒவ்வொருமுறை ரவியும் ஏக்தாவும் வெளியில் செல்லும்போது நான்தான் அவளை கவனித்துக்கொள்வேன். அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டதிலிருந்து எங்களுடன்தான் ஆர்யா இருக்கிறாள்” என்று கூறியுள்ளார்.

மேலும், ``ஒரு தாயின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. நான் முடிந்தவரை ஆர்யாவை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க முயற்சி செய்கிறேன். அவளுக்கு பால், பிஸ்கட் போன்றவற்றை கொடுக்கிறோம். அவளுடன் இணைந்து விளையாடுவோம். மாலை நேரங்களில் வெளியில் அழைத்துச் செல்கிறோம். அப்போதுதான் அவள் பிற குழந்தைகளுடனும் விளையாட முடியும்” என்றார்.

சசிகாந்த் பேசும்போது, ``ரவியும் ஏக்தாவும் கைது செய்யப்பட்டதிலிருந்தே எங்கள் குடும்பம் முழுவதுமாக ஆர்யாவைக் கவனித்து வருகிறோம். ஆர்யா, தன்னுடைய அப்பா அம்மாவின் புகைப்படத்தை மொபைலில் பார்த்துவிட்டு எங்களைப் பார்க்கும்போது `மம்மா எங்கே?’ என்று கேட்பதுபோல் உள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ``இருவரையும் ஜாமீனில் வெளியே எடுக்க மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் ஜனவரி 1-ம் தேதி உள்ளூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளதாகவும்” கூறியுள்ளார்.

பிரியங்கா காந்தி இதுதொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில், ``வாரணாசியில் சமீபத்தில் அம்பேத்கரியவாதிகள், காந்தியவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். காவல்துறையினர் இவர்களை சிறைப்படுத்தியுள்ளனர். ஒரு குடும்பத்தில் 1 வயதுக் குழந்தை மட்டும் தனியாக உள்ளது. அமைதியாக நடந்த போராட்டத்துக்காக இந்தத் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை எல்லையை மீறியுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.