Published:Updated:

மும்பை: `டவ்தே புயல்; நடுக்கடலில் 12 மணி நேரம்; தப்பித்த ஓ.என்.ஜி.சி ஊழியர்கள்’ திக் திக் நிமிடங்கள்

மீட்கப்பட்டவர்கள்
மீட்கப்பட்டவர்கள்

புயலால் கடலில் கவிழ்ந்த படகிலிருந்து கடலில் குதித்த ஓ.என்.ஜி.சி.ஊழியர்கள் உயிர்பிழைக்க 12 மணி நேரம் கடலில் நீந்தித் தப்பி பிழைத்துள்ளனர்.

மும்பை அருகே இரண்டு நாள்களுக்கு முன்பு டவ்தே புயல் குஜராத்தைக் கடந்தது. அப்படிக் கடந்து செல்லும்போது மும்பையில் பலத்த காற்று வீசியது. மும்பையிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஓ.என்.ஜி.சி-க்குச் சொந்தமான ஹீரா என்ற எண்ணெய்க் கிணற்றைச் சுற்றி ஊழியர்கள் தங்குவதற்காக குடியிருப்புப் படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. புயலால் எழுந்த காற்று காரணமாக இதில் 273 பேர் இருந்த படகு நங்கூரத்தை இழுத்துக்கொண்டு நகர்ந்து, எண்ணெய்க் கிணற்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகிக் கவிழ்ந்தது. அதிலிருந்த ஊழியர்கள் அனைவரும் உடனே பாதுகாப்புக் கவச உடையணிந்து கடலில் குதித்துவிட்டனர். கடலில் குதித்தவர்களைத் தேடும் பணியில் கடற்படை கப்பல்களும், கடலோர பாதுகாப்பு படை ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. இரண்டு நாள்கள் போராடி 186 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்டவர்கள்
மீட்கப்பட்டவர்கள்

கடலில் மூழ்கி இறந்த 26 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சியவர்களை தொடர்ந்து தேடிவருகின்றனர். கடலில் உயிருக்குப் போராடி மீட்கப்பட்ட 125 ஓ.என்.ஜி.சி ஊழியர்கள் மற்றும் மீட்கப்பட்ட இறந்தவர்களின் உடல்களுடன் ஐ.என்.எஸ்.கொச்சி போர்க்கப்பல் மும்பை துறைமுகத்துக்கு வந்தது. அதிலிருந்து இறங்கியவர்கள், தாங்கள் உயிர்பிழைக்க மாட்டோம் என்றுதான் நினைத்தோம் என்று தெரிவித்தனர். கடல் அலைகள் 10 மீட்டர் உயரத்துக்கு எழும்பியதாகவும், காற்று வேறு பலமாக வீசியதாகவும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் தண்ணீரில் 12 மணி நேரம் மிதந்துகொண்டிருந்ததாகவும் மீட்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

மனோஜ் என்ற ஊழியர் இது குறித்துக் கூறுகையில், ``நான் உயிருடன் இருப்பேன் என்று நினைத்தே பார்க்கவில்லை. ஆனாலும் உயிர் பிழைக்க வேண்டும் என்ற வெறியில் எட்டு மணி நேரம் வரை நீரில் நீந்திக்கொண்டிருந்தேன். அதன் பிறகு கடற்படையினர் என்னை மீட்டனர். நாங்கள் இருந்த படகு கவிழ ஆரம்பித்தவுடன் அனைவரும் உயிர்காப்பு உடை அணிந்துகொண்டு கடலில் குதித்துவிட்டோம்” என்று தெரிவித்தார்.

வெறும் 19 வயதேயாகும் மனோஜ் கடந்த மாதம்தான் வேலைக்குச் சேர்ந்திருந்தார். அவரது அனைத்து ஆவணங்களும் தண்ணீரில் சென்றுவிட்டன. தான் மீண்டும் இந்த வேலைக்குப் போக மாட்டேன் என்று பயத்துடன் தெரிவித்தார் மனோஜ். அமித் குமார் என்பவரும் இதே போன்று படகு கவிழ ஆரம்பித்ததும் கடலில் குதித்து 11 மணி நேரம் நீரில் நீந்தியிருக்கிறார்.

மீட்புப் பணியில் ஹெலிகாப்டர்
மீட்புப் பணியில் ஹெலிகாப்டர்

காயத்துடன் மீட்கப்பட்ட மற்றோர் ஊழியர் இது குறித்துக் கூறுகையில், ``கடற்படை இல்லாவிட்டால் நாங்கள் உயிரோடே இருந்திருக்க மாட்டோம். எங்களுக்கு என்ன நடந்திருக்கும் என்றே தெரியாது. எங்களுடன் இருந்த ஓர் அதிகாரி புயல் பெரிதாக இல்லை என்று தெரிவித்தார். ஆனால் அவரை இப்போது காணவில்லை. நாங்கள் தேடிப்பார்த்தோம். ஆனால் காணவில்லை” என்று தெரிவித்தார். மற்றோர் ஊழியர் மூழ்கும் படகிலிருந்து நள்ளிரவில் கடலுக்குள் குதித்து கடலில் தொடர்ந்து 12 மணி நேரம் நீந்திக்கொண்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்னும் எத்தனை பேர் கடலில் காப்பாற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் மிதந்துகொண்டிருக்கின்றனர் என்று தெரியவில்லை. அவர்களையும் மீட்க வேண்டும் என்பதற்காக ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகும் ஏன் ஓ.என்.ஜி.சி ஊழியர்கள் கரைக்குத் திரும்பாமல் இருந்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை அவர்கள் மதிக்கவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு