Published:Updated:

`இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பா.ஜ.க அரசு! ’ -நாடாளுமன்றத்தில் கொந்தளித்த தி.மு.க, காங்கிரஸ்

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இட ஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 2012-ம் ஆண்டு பொதுப்பணித்துறையில் காலியாக இருந்த பணியிடங்களை எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு அளிக்காமல், அப்படியே நிரப்புவதற்கு அந்த மாநில அரசு முடிவுசெய்தது. பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. முதலில் இதை விசாரித்த மாநில உயர் நீதிமன்றம், அரசாணையை ரத்துசெய்து குறிப்பிட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு தீர்ப்பு வழங்கியது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இதை எதிர்த்து உத்தரகாண்ட் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘ இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது மாநில அரசுக்குக் கட்டாயமில்லை. பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோருவது தனி நபரின் அடிப்படை உரிமை இல்லை. அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட முடியாது. பணியிடங்கள் நிரப்புவதிலும் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமா வேண்டாமா என்பதை மாநில அரசுகளே முடிவுசெய்துகொள்ளலாம்’ என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். உச்ச நீதிமன்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதுகுறித்து மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி ஆ.ராசா, “மத்திய பா.ஜ.க அரசு பொறுப்பேற்றது முதல் இடஒதுக்கீட்டுக்கு எதிராகவே செயல்பட்டுவருகிறது. இந்த விவகாரத்தில், மத்திய அரசு மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

அதேபோல், காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க பா.ஜ.க அரசுக்கு விருப்பமில்லை. அவர்கள் இடஒதுக்கீடு முறையைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர்” என்று கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

ஆ.ராசா
ஆ.ராசா

எதிர்க்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்து அவையில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், “உணர்வுபூர்வமான இந்தப் பிரச்னையை காங்கிரஸ் கட்சி அரசியலாக்குகிறது. இதில், மத்திய சமூகநீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், விரைவில் மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்வார். அதுவரை உறுப்பினர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். அப்போதும் திருப்தி ஏற்படவில்லையென்றால் இதுகுறித்து விவாதிக்கலாம்” என்று கூறினார். இவரின் பேச்சைக் கேட்காத எதிர்க்கட்சியினர், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

`நிறைய ட்யூப் லைட்டுகள் இருக்கின்றன!' - நாடாளுமன்றத்தில் காங்கிரஸை விமர்சித்த மோடி

பிற்பகலில் மீண்டும் அவை கூடியதும் , ‘இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து உயர்மட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். இந்த வழக்கில், மத்திய அரசு ஒரு தரப்பாக நடந்து கொள்ளாது. உத்தரகாண்ட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் இந்த வழக்கு தொடரப்பட்டது” என்று சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கூறினார். இவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி-க்கள், அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

`எஸ்.சி, எஸ்.டி பிரிவினரின் இட ஒதுக்கீட்டை மத்திய அரசு காக்க வேண்டும்' என்று அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துவருகின்றனர். இதுபற்றிப் பேசியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “ஆர்.எஸ்.எஸ்-ஸும் பா.ஜ.க -வும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவை. இட ஒதுக்கீட்டுக்கு முடிவுகட்ட யார் நினைத்தாலும் விடமாட்டோம்” என்று விமர்சித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு