Published:Updated:

`இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்!' - மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி #CAA

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் இளைஞர்கள் சிலர் தவறாக வழிநடத்தப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தனர்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு இரண்டுநாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சென்றிருக்கிறார். முதல்நாளில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். மோடி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார்.

பிரதமர் மோடி - மம்தா பானர்ஜி சந்திப்பு
பிரதமர் மோடி - மம்தா பானர்ஜி சந்திப்பு

இதனால், போராட்டக்காரர்கள் மம்தா பானர்ஜிக்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பிரதமருடனான சந்திப்புக்குப் பின் போராட்டக்காரர்களிடையே பேசிய மம்தா, பிரதமரை சந்திப்பது மரபு என்றும் அவரிடம் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை மேற்குவங்கத்தில் அமல்படுத்த முடியாது என்று கூறியதாகவும் விளக்கம் அளித்தார்.

இந்தநிலையில், ஹவுராவில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் தலைமையகத்துக்கு பிரதமர் மோடி இன்று சென்று பிரார்த்தனை நடத்தினார். மேலும், அங்கு மடத்தின் மூத்த உறுப்பினர்களையும் அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் அங்கு நடந்த விவேகானந்தர் பிறந்தநாள் விழாவில் பேசிய பிரதமர் மோடி, ``கடந்த முறை நான் இங்குவந்த போது அட்மாஷ்தனாந்தாவிடம் ஆசீர்வாதம் வாங்கினேன். இன்று அவர் நம்மிடையே இல்லை. ஆனால், அவரது பணி மற்றும் பாதை ஆகியவை ராமகிருஷ்ண மடத்தின் வாயிலாக நமக்கு வழிகாட்டும்.

மோடி
மோடி
ANI

நான் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். குடியுரிமை திருத்தச் சட்டம் எந்தவொருவரின் குடியுரிமையையும் பறிப்பதற்காக அல்ல. மாறாக குடியுரிமை அளிக்கவே வழிவகை செய்யும். சுதந்திரம் பெற்ற பின்னர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்ட மதரீதியிலான சிறுபான்மையினருக்கு இந்தியா குடியுரிமை அளிக்க வேண்டும் என மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் விரும்பினர்'' என்றார்.

மேலும் அவர் பேசுகையில், ``சுவாமி விவேகானந்தர் கூறிய `100 துடிப்புள்ள இளைஞர்களைக் கொடுங்கள். நான் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன்' என்ற வார்த்தையை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். சாதிக்க வேண்டும் என்ற நமது ஆற்றல், வேட்கை ஆகியவையே மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தேவை.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இளைஞர்களிடையே ஏகப்பட்ட கேள்விகள் இருக்கின்றன. குடியுரிமை திருத்த சட்டம் குறித்த வதந்திகளால் அவர்களில் சிலர் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். அவர்களின் சந்தேகங்களைத் தீர்த்துவைப்பது நமது கடமை'' என்றார்.

`வன்முறையை உருவாக்கும் பிரிவினரை நாம் அனுமதிக்கக் கூடாது!’ - போராட்டம் குறித்து பிரதமர் மோடி ட்வீட்

``நீங்கள் இதை தெளிவாகப் புரிந்துகொண்டீர்கள். ஆனால், அரசியல் விளையாட்டில் ஈடுபடுபவர்கள் வேண்டுமென்றே இதைப் புரிந்துகொள்ள மறுக்கின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்'' என்றும் பிரதமர் மோடி பேசினார். குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும்நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு பேசியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு