Published:Updated:

’நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம்’- அஸ்ஸாம் குடியுரிமைப் பட்டியலில் மிஸ் ஆன 19 லட்சம் மக்கள்

சத்யா கோபாலன்

அஸ்ஸாம் மாநிலத்தின் தேசிய குடியுரிமைப் பட்டியலில், 19 லட்சம் மக்களின் பெயர்கள் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assam NRC
Assam NRC ( AP )

கடந்த பல ஆண்டுகளாக, வங்க தேசத்திலிருந்து லட்சக்கணக்கான மக்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, அஸ்ஸாம் மாநிலத்தில் தங்கி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இதனால் யார் உண்மையான இந்தியக் குடிமக்கள் என அடையாளம் காண முடியாமல் அம்மாநில அரசு கடும் சிரமத்தை சந்தித்தது.

Assam NRC
Assam NRC
AP

இந்தியாவிலேயே அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும்தான் ’தேசிய குடிமக்கள் பதிவு’ பட்டியல் உள்ளது. இது, கடந்த 1951-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுவருகிறது. இதற்கிடையில், அஸ்ஸாமில் சட்ட விரோத குடியேற்றம் நடப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில், மீண்டும் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியலைத் தயாரிக்கும்படி 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த வருடம் அஸ்ஸாம் மக்களின் குடிமக்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. குடிமக்கள் பட்டியலில் சேர்க்கும் படி 3.29 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2.89 கோடி மக்களின் பெயர்கள் மட்டுமே பட்டியலில் இருக்கிறது. 40 லட்சம் மக்களின் பெயர் இல்லாததால், பெரும் சர்ச்சை நிலவியது.

Assam NRC
Assam NRC
AP

இதனால், விடுபட்டவர்களின் பெயர்களைச் சேர்க்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு, அதற்கான இறுதிப் பட்டியல் கடந்த ஜூலை மாதம் வெளியிடுவதாக இருந்தது. ஆனால், அதை ஆகஸ்ட் வரை நீடித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அஸ்ஸாம் மக்களின் குடியுரிமைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலிலும் சுமார் 19 லட்சம் மக்களின் பெயர்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. குடிமக்கள் பட்டியல் வெளியிடப்படும்போது, எந்த பிரச்னைகளும் ஏற்படாமல் இருக்க, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது . இறுதிப் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள், இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க வெளிநாட்டுத் தீர்ப்பாயத்தில் முறையிடலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Himanta Biswa Sarma
Himanta Biswa Sarma
Twitter/@himantabiswa

இந்நிலையில், பெயர் விடுபட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்ஸாம் அமைச்சர் ஹிமாந்த பீஸ்வா சர்மா, “ இறுதிப் பட்டியல் வெளியீட்டுக்குப் பிறகு, தேசிய குடியுரிமைப் பட்டியல்மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். உண்மையான இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும்போது, இந்த ஆவணம் அஸ்ஸாமியர்களுக்குச் சிறந்தது என எப்படிக் கூறமுடியும்” என்று தெரிவித்துள்ளார்.