Published:Updated:

கோவா: ஆக்ஸிஜன் பற்றாக்குறை; மேலும் 13 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு! - 4 நாளில் 75 பேர் மரணம்?!

ஆக்ஸிஜன் கசிவு
ஆக்ஸிஜன் கசிவு

கோவாவிலுள்ள அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மேலும் 13 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். நான்கு நாள்களில் 75 பேர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் வேகமாகப் பரவிவரும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்ஸிஜன் முக்கியத் தேவையாக இருக்கிறது. ஒரே நேரத்தில் நாடு முழுவதும் ஆக்ஸிஜனுக்கான தேவை அதிகரித்ததால், ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மற்றொருபுறம் ஆக்ஸிஜன் கசிவால் விபத்துகளும் ஏற்பட்டுவருகின்றன. நாசிக் அரசு மருத்துவமனையில், ஆக்ஸிஜன் கசிவு ஏற்பட்டு 26 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அது போன்ற ஒரு சம்பவம் கோவாவில் நிகழ்ந்துள்ளது.

தெற்கு கோவாவிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் திடீரென ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு 13 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். ஏற்கெனவே இந்த மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆக்ஸிஜன் டேங்க்கிலிருந்து ஆக்ஸிஜன் கசிவு ஏற்பட்டது.

பிரமோத் சாவந்த்
பிரமோத் சாவந்த்

இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளையில் தடங்கல் ஏற்பட்டது. மருத்துவமனை ஊழியர்கள் ஆக்ஸிஜன் கசிவைச் சரிசெய்வதற்கு முன்பாக 26 கொரோனா நோயாளிகள் ஆக்ஸிஜன் கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் நடந்த மருத்துவமனையை கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ``ஆக்ஸிஜன் இருப்பு மற்றும் கொரோனா நோயாளிகளுக்கான ஆக்ஸிஜன் தேவையில் இடைவெளி இருக்கிறது. இந்தப் பிரச்னை சரிசெய்யப்பட வேண்டும் . ஆனால், தற்போது கோவாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை" என்றார்.

ஆனால், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வஜீத் ரானே அளித்த பேட்டியில், ``காலை 2 மணியிலிருந்து 6 மணி வரை ஆக்ஸிஜன் சப்ளையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். கொரோனா நோயாளிகள் இறந்ததற்கான காரணம் குறித்து உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். உயர் நீதிமன்றம் தலையிட்டு தெற்கு கோவா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சப்ளை செய்யப்படும் ஆக்ஸிஜன் அளவு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆக்ஸிஜன் உருளை
ஆக்ஸிஜன் உருளை

ஆனால், இந்தப் பிரச்னை அதோடு முடிந்துவிடவில்லை. வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மேலும் 13 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்த மருத்துவமனையை முன்னாள் முதல்வர் விஜய் சர்தேசாய் பார்வையிட்ட பிறகு அளித்த பேட்டியில், ``அதிகாலை 2 மணியிலிருந்து 6 மணிக்குள்தான் இந்த ஆக்ஸிஜன் பற்றாக்குறை பிரச்னை ஏற்படுகிறது. கடந்த நான்கு நாள்களில் 75 பேர் உயிரிழந்துள்ளனர். மே 10-ம் தேதி 26 பேரும், 11-ம் தேதி 21 பேரும், 12-ம் தேதி 15 பேரும், 13-ம் தேதி 13 பேரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்துள்ளனர். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகும் சாவு எண்ணிக்கை குறையவில்லை. நிர்வாகம் முற்றிலும் செயலிழந்துவிட்டது. அரசு எதையும் செய்யவில்லை” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு