Published:Updated:

`அருங்காட்சியகத்தில் அபிநந்தன் சிறைப்பிடிக்கப்பட்ட உருவ பொம்மை!' - புதிய சர்ச்சையில் பாகிஸ்தான்

பாகிஸ்தானின் விமானப்படை அருங்காட்சியகத்தில், இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் சிறைப்பிடிக்கப்பட்டது போன்ற உருவபொம்மையை வைத்திருப்பதாக வெளியான தகவல், புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அபிநந்தன் உருவபொம்மை
அபிநந்தன் உருவபொம்மை ( Twitter/AnwarLodhi )

இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்த பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானத்தை, இந்திய விமானப்படை வீரர் விங்க் கமாண்டர் அபிநந்தன், மிக் 21 ரக விமானத்தில் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி துரத்திச்சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக விமானம் தாக்குதலுக்கு உள்ளாகவே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அவர் தரையிறங்க நேர்ந்தது. இதையடுத்து, அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பிடித்தது. அவர், இஸ்லாமாபாத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார். சிறைப்பிடிக்கப்பட்டு 58 மணி நேரத்துக்குப் பின்னர், இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அபிநந்தன்
அபிநந்தன்

பாகிஸ்தானில் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தபோது அவர், கையில் தேநீர் கோப்பையுடன் அந்நாட்டு ராணுவத்தினர் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலான வீடியோ ஒன்றை பாகிஸ்தான் வெளியிட்டது. அதேபோல், பாகிஸ்தான் ராணுவத்தை அவர் புகழ்ந்து பேசுவதுபோலவும் ஒரு வீடியோ வெளியானது. இந்தியா வந்தபின்னர் அவர் கூறிய தகவல்களின் அடிப்படையில், இரண்டாவது வீடியோ போலியானது என்று தெரியவந்தது. இந்தியா திரும்பிய அபிநந்தனுக்கு, டெல்லி விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் பணிக்குத் திரும்பினார்.

`அபிநந்தன் சிக்கியதற்குக் காரணமே தகவல் தொடர்பு சாதனங்கள்தான்!' - பின்னணியை விவரிக்கும் அதிகாரிகள்

இந்த நிலையில், அபிநந்தன் சிறைப்பிடிக்கப்பட்டதுபோன்ற உருவபொம்மை, பாகிஸ்தான் விமானப்படை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான அன்வர் லோதி, இதுதொடர்பான புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

ட்விட்டர் பதிவு
ட்விட்டர் பதிவு

அதில், இந்திய விமானப்படை சீருடையுடன் அபிநந்தன் நிற்பது போலவும், அவருக்குப் பின்னால் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் நிற்பது போலவும் அந்த உருவபொம்மை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ''பாகிஸ்தான் விமானப்படை, அபிநந்தனின் உருவ பொம்மையை அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறது. அவர் கையில் தேநீர் கோப்பை இருப்பதுபோல் அமைக்கப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்'' என்று அன்வர் லோதி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இந்த விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.