Published:Updated:

`4 முயற்சிகள்... அனைத்துமே தோல்வி!' - ஐ.நா சபையில் பாகிஸ்தானின் முயற்சியை முறியடித்த இந்தியா #UNHRC

ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க, ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளை சமயோசிதமாகச் செயல்பட்டு இந்தியா முறியடித்திருக்கிறது.

Indian envoys at UN
Indian envoys at UN ( Twitter )

சிறப்பு அந்தஸ்து நீக்கம்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ ரத்துசெய்த இந்தியா, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க இருப்பதாகவும் அறிவித்தது. இந்தியாவின் இந்த முடிவுக்கு, அண்டை நாடான பாகிஸ்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. மேலும், இந்த விவகாரத்தில் இந்தியா, தனது முடிவிலிருந்து பின்வாங்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், உலக நாடுகள் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

Jammu and Kashmir
Jammu and Kashmir
File

இதுதொடர்பாக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை பாகிஸ்தான் நாடியது. ஆனால், `இது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை' என அமெரிக்கா கைவிரித்துவிட்டது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னிலையிலேயே, `இரு நாடுகளுக்கிடையிலான பிரச்னையைப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்' என்று ட்ரம்ப் பேசியிருந்தார். அதேநேரம், அந்தப் பேச்சுவார்த்தையை மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா முன்வந்தது. ஆனால், அதை இந்தியா மறுத்துவிட்டது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையக் கூட்டம்

இந்த நிலையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், ஐக்கிய நாடுகள் அவையின் 42-வது மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. வரும் 27-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டிருந்தது. ஜெனீவா மாநாட்டில் கலந்துகொள்ள பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டுச் செல்லும்முன் பேசிய அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, ``இந்த விவகாரம் தொடர்பாக அவசர விவாதம் கொண்டுவர வலியுறுத்தித் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற பாகிஸ்தான் முயற்சிக்கும்'' என்று கூறியிருந்தார்.

pakistan foreign minister shah mehmood qureshi
pakistan foreign minister shah mehmood qureshi
Twitter

மொத்தம் 47 நாடுகள் உறுப்பினராக உள்ள ஐக்கிய நாடுகள் அவையில், ஒரு விவகாரம் குறித்து தீர்மானம் நிறைவேற்றி விவாதிக்க வேண்டுமென்றால், குறைந்தபட்சம் 24 நாடுகளின் ஆதரவு வேண்டும். நடப்பு கூட்டத்தொடரிலேயே இதுகுறித்து விவாதிக்கக் கோரி, பாகிஸ்தான் மனு அளிக்கவேண்டிய கால அவகாசம் நேற்றுடன் (செப்டம்பர் 19) முடிவடைந்தநிலையில், அதன் முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது.

`அதை யாரு சொல்றதுன்னு இல்லியா!'- ஐ.நா-வில் பாகிஸ்தானுக்கு பதிலடிகொடுத்த இந்தியா #UNHRC

சமீபத்தில், இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் தங்களின் கோரிக்கைக்கு ஆதரவாக 58 நாடுகள் இருப்பதாகக் கூறி சர்ச்சையில் சிக்கினார். `மொத்தம் 47 நாடுகள் மட்டுமே உறுப்பினராக இருக்கும் அமைப்பில், உங்களுக்கு எப்படி 58 நாடுகளின் ஆதரவு கிடைத்தது?' என்று கூறி சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை அவர் எதிர்கொண்டார்.

Imran khan - Trump
Imran khan - Trump

ஐ.நா அவையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுவருவதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டை முன்வைத்தது. பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் பிரதிநிதிகளான விஜய் தாக்கூர் சிங், ராஜீவ் சந்தர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தக்க பதிலடி கொடுத்தனர்.

விஜய் தாக்கூர் சிங் பேசுகையில், `பல்வேறு தீவிரவாதக் குழுக்களின் தலைவர்களுக்குப் பல ஆண்டுகளாக அடைக்கலம் கொடுக்கும் உலகத் தீவிரவாதத்தின் மையப்புள்ளியில் இருந்துதான் இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன என்பதை உலக நாடுகள் அறியும்'' என காட்டமாகவே பதிலடி கொடுத்திருந்தார்.

Indian envoys
Indian envoys
MEA

ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பாகிஸ்தான் எடுத்த 4 முயற்சிகளுமே தோல்வியில் முடிந்திருக்கின்றன. சீனாவைத் தவிர வேறெந்த நாடுகளும் பாகிஸ்தனின் குரலுக்கு செவிசாய்க்கவில்லை என்று தெரிகிறது. மற்ற நாடுகள் எதுவும் இந்த விவகாரத்தில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், தங்களுக்குப் போதிய ஆதரவு இருப்பதாகக் கடந்த வாரம் முழுவதும் பாகிஸ்தான் தொடர்ச்சியாகக் கூறிவந்தது. இந்தியாவின் பிரதிநிதிகள் முன்னிலையில் அவையில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதிகள், தங்களை ஆதரிக்கும் நாடுகள்குறித்த பட்டியல் இருப்பதாகவும் கூறினர். ஆனால், இறுதிவரை பாகிஸ்தான் தரப்பிலிருந்து அந்தப் பட்டியல் இந்தியாவிடம் அளிக்கப்படவில்லை. இதுதொடர்பாகத் தங்களது வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாகிஸ்தான், ஆதரவு நாடுகள் பட்டியலை இந்தியாவிடம் அளித்துவிட்டதாகத் தெரிவித்தது. ஆனால், அப்படி ஒரு பட்டியல் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றே இந்தியப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

Jaishankar (Minister of External Affairs of India)
Jaishankar (Minister of External Affairs of India)
MEA
பல்வேறு தீவிரவாதக் குழுக்களின் தலைவர்களுக்குப் பல ஆண்டுகளாக அடைக்கலம்கொடுக்கும் உலகத் தீவிரவாதத்தின் மையப்புள்ளியில் இருந்துதான் இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன என்பதை உலக நாடுகள் அறியும்'.
இந்தியத் தூதர் விஜய் தாக்கூர் சிங்

ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், அவசர விவாதம் கோரும் பாகிஸ்தானின் முயற்சியை முறியடிக்க, இந்தியா தரப்பில் தெளிவான திட்டம் வகுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்த விவகாரம் தொடர்பாகப் பல்வேறு நாடுகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டதுடன், அவற்றின் ஆதரவையும் பெறுவதில் வெற்றி கண்டார்.

'காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள்' என பாகிஸ்தான் குற்றம் சாட்டியபோது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் மனித உரிமை மீறல்கள்குறித்து இந்தியா கேள்வியெழுப்பியது. இந்த விவகாரத்தில் ஜப்பான், ஆஸ்திரேலியா, நேபாளம் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்தன.

Indian envoy Vijay thakur singh with UNHR High Commissioner
Indian envoy Vijay thakur singh with UNHR High Commissioner
Twitter

ஜம்மு - காஷ்மீரில் இயல்புநிலை திரும்புவதற்கு இந்தியா எடுத்துவரும் முயற்சிகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் உறேன மிட்செல் பேச்லெட்டை நேரில் சந்தித்து, இந்தியத் தூதர் விஜய் தாக்கூர் சிங் விளக்கினார். இந்தச் சந்திப்பு, மனித உரிமை ஆணையக் கூட்டத்தின் நடுவே, கடந்த 12-ம் தேதி நடைபெற்றது.

இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய நாடுகள் அவைக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் சையது அக்பருதீனிடம், `ஐ.நா பொதுக்கூட்டத்தில் ஜம்மு - காஷ்மீர் விவகாரம் எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கிறீர்களா? அப்படி எழுப்பப்பட்டால், அதை எப்படி எதிர்கொள்வீர்கள்?' என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அக்பருதீன், `ஒரு பிரச்னையை சர்வதேச அளவில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொருவகையாகக் கையாளும். சிலர் மிகவும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவர். அதற்கு எங்களின் பதிலடி அதைவிட ஒருபடி உயர்ந்த நிலையில் இருந்துகொண்டு பதிலளிப்பதாகத் தான் இருக்கும். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களின் முடிவு. கடந்தகாலங்களில் அவர்கள் தீவிரவாதத்தை உயர்த்திப் பிடிப்பதைப் பார்த்திருக்கிறோம். இப்போது வெறுப்புப் பேச்சை அவர்கள் உயர்த்திப்பிடிப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள்'' என்றார். இது சர்வதேச அளவில் இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தனித்து விடப்பட்டிருக்கிறது.