Published:Updated:

எல்லையையொட்டி படைகளைக் குவிக்கும் பாகிஸ்தான்! - தீவிரக் கண்காணிப்பில் இந்திய ராணுவம்

தினேஷ் ராமையா

இந்திய எல்லையையொட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் படைகளைக் குவித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்திய ராணுவம் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.

Pakistan Army
Pakistan Army

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 கடந்த மாதம் நீக்கப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மூலம் இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய அந்நாட்டு ராணுவம் உதவி செய்துவருவதாகக் கூறப்படுகிறது.

Vikatan
Pakistan Army
Pakistan Army

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர், இந்திய எல்லையையொட்டி சிறப்பு படைப்பிரிவான எஸ்.எஸ்.ஜி (SSG) படைப்பிரிவை சேர்ந்த 100 கமாண்டோக்களை பாகிஸ்தான் நிலைநிறுத்தியது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாத செயல்களை ஊக்குவிக்க, தீவிரவாதிகளை இந்திய எல்லைக்குள் ஊடுருவலை அதிகப்படுத்தவே அவர்கள் எல்லையில் குவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அவர்கள் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இணைந்து நடத்திய பதில் தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் கமாண்டோக்கள் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியானது. அதேபோல், குஜராத்தையொட்டிய சர் க்ரீக் பகுதியிலும் சிறப்பு படைப்பிரிவைச் சேர்ந்த கமாண்டோக்களைக் குவித்தது பாகிஸ்தான்.

Vikatan

காஷ்மீர் விவகாரத்தால் இருநாடுகள் இடையே பிரச்னை நிலவுவதாகக் காட்டி, அதன்மூலம் சர்வதேச நாடுகள் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாத செயல்களைப் பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்குவித்து உதவிகள் செய்துவருவதாக இந்தியா தரப்பில் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்திய பாதுகாப்புப் படைக்கு எதிராகத் தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதக் குழுக்களைப் பயன்படுத்த பாகிஸ்தான் முயற்சி செய்வதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

Indian Army
Indian Army
AP

இந்தநிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சர்வதேச எல்லையையொட்டிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாக் (Bagh) மற்றும் கோட்லி (Kotli) ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் சுமார் 2,000 வீரர்களைக் கூடுதலாகக் குவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தத் தகவலை இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியிருப்பதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கூடுதல் வீரர்களைப் பாகிஸ்தான் குவித்திருந்தாலும், அவர்கள் தாக்குதலுக்குத் தயாராக நிறுத்தப்படவில்லை என்றும் இந்திய ராணுவ அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இருப்பினும் சர்வதேச எல்லைப்பகுதியையொட்டிய பகுதிகளில் நிலைமையை இந்திய ராணுவம் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.