Published:Updated:

`14 மாதக் குழந்தையைப் பிரிந்த தருணம் வேதனையானது!' -ஜாமீனில் வெளியில் வந்த சம்பக்கின் பெற்றோர் #CAA

குழந்தையின் நிலை கருதிப் பெற்றோரை விடுவிக்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி செயலாளர் பிரியங்கா காந்தியும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

குழந்தையைக் கொஞ்சும் எக்தா
குழந்தையைக் கொஞ்சும் எக்தா

நாட்டில் சி.ஏ.ஏ சட்டத்துக்கு எதிராகப் பல நகரங்களில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியிலும் போராட்டம் வெடித்தது. என்.ஜி.ஓ நடத்தி வரும் ரவிசங்கர் மற்றும் அவரின் மனைவி எக்தா ஆகியோரும் வாரணாசி போராட்டத்தில் பங்கேற்றனர்.

இவர்களுக்கு 14 மாதப் பெண் குழந்தையும் இருந்தது. குழந்தையின் பெயர் சம்பக். போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தினால் கடந்த டிசம்பர் 19- ந் தேதி ரவிசங்கர், எக்தா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

14 மாதக் குழந்தை, பாட்டி ஷெய்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் ஜாமீன் கேட்ட வழக்கு டிசம்பர் 23-ம் தேதி நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால், ஜாமீன் மறுக்கப்பட்டது. இதற்கிடையே, குழந்தையின் நிலை கருதிப் பெற்றோரை விடுவிக்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி செயலாளர் பிரியங்கா காந்தியும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

வாரணாசியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பெற்றோரை விடுவிக்க வேண்டி மனு அளிக்கப்பட்டது. இந்தநிலையில், சம்பக்கின் பெற்றோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, வீடு திரும்பிய பெற்றோர் சம்பக்கைக் கொஞ்சி மகிழ்ந்தனர்.

`மம்மா எங்கே..?!’ - பெற்றோர் கைதால் தவிக்கும் ஒன்றரை வயதுக் குழந்தை #CAA

சம்பக்கின் பாட்டி ஷெய்லா கூறுகையில், ``சம்பக் எப்போதும் பெற்றோரின் நினைவாகவே இருந்தாள். சாப்பிட மறுத்து அடம் பிடித்தாள். அவ்வப்போது ஏமாற்றி உணவு ஊட்டினோம். தாய் இல்லாமல் குழந்தை பல நாள்கள் தவித்தது. இரவில் உறங்காமல் அழுதுகொண்டே இருந்தாள்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தையை விட்டுப் பிரிந்தது தாங்க முடியாத துயரத்தை அளித்தது.
எக்தா

இப்போதுதான் குழந்தையின் முகத்தில் சந்தோஷத்தைப் பார்க்க முடிகிறது'' என்றார்.

தாயார் எக்தா, ``குழந்தை பால் குடி மறக்கவில்லை. இப்போதும் தாய்ப்பால் புகட்டுகிறேன். குழந்தையைப் பிரிந்து இருந்த தருணம் மிகுந்த வேதனையாக இருந்தது'' என்று கூறியுள்ளார்.