Published:Updated:

`கட்டண க்வாரன்டீன்; டெல்லிக்கே திரும்பிய சோகம்!’ - ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பெங்களூரு

பயணிகள்
பயணிகள் ( ANI )

பெங்களூகு சென்றதும் பரிசோதனைக்குப் பின் சொந்த வீடுகளுக்குச் சென்று விடலாம் என எண்ணி இருந்தவர்களுக்கு அங்கு பணியில் இருந்த அதிகாரிகள், 14 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் குறித்து தெரிவித்தனர்.

கொரோனா பரவலுக்குப் பிறகு, நாடு இப்போது 4-ம் கட்ட லாக்டெளனுக்குத் தயாரகி வருகிறது. இது முற்றிலும் மாறுபட்ட லாக் டெளனாக இருக்கும் என நாட்டு மக்களுக்கு வழங்கிய உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அதற்கான புதிய விதிமுறைகள் தற்போது வகுக்கப்பட்டு வருகிறது. வரும் 18-ம் தேதிக்குள் இந்த அறிவிப்பு வெளியாகும்.

ரயில்கள்
ரயில்கள்
வி.ஸ்ரீனிவாசுலு

இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் லாக் டெளனுக்கு முன்னரே வெளியூர் பயணமான பலருக்கும் சொந்த ஊர் திரும்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் பலரும் தங்கள் சொந்த ஊர் பயணிக்க டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தனர். சிறப்பு ரயில் என்பதால் டிக்கெட் விலை அதிகமாக இருந்ததாகப் பயணிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் டெல்லியில் இருந்து நேற்று காலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்த சிறப்பு ரயில் பயணிகளுக்கு ரயில் நிலையத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், பெங்களூகு சென்றதும், பரிசோதனைக்குப் பின் சொந்த வீடுகளுக்குச் சென்று விடலாம் என எண்ணி இருந்தவர்களுக்கு அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் 14 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் குறித்து தெரிவித்தனர். அதாவது, அரசு தயார் செய்திருக்கும் இடங்களில் விரும்பினால் இலவசமாகத் தங்கலாம். அல்லது கட்டணம் செலுத்தி விடுதிகளிலும் தங்கலாம். பல்வேறு விதமான ஹோட்டகளுக்குப் பல்வேறு விதமான கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

`கட்டண க்வாரன்டீன்; டெல்லிக்கே திரும்பிய சோகம்!’ - ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பெங்களூரு

இந்நிலையில், இது தொடர்பான தகவல்கள், தங்களுக்கு முன்னரே தெரிவிக்கபடவில்லை எனக் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலர், தங்களிடம், போதிய பணம் இல்லை எனக் கெஞ்சினர். ஆனால், மாநில அரசு அதிகாரிகளோ, இதுதான் வழிமுறை என உறுதியாகச் சொல்லிவிட்டனர்.

பெயர் குறிப்பிடவிரும்பாத நபர் ஒருவர், `கடந்த மூன்று மாதமாகப் பணி புரிந்த இடத்தில் முறையான வருமானம் இல்லாமல், கஷ்டப்பட்டேன். ரயில் மூலம் எப்பாடியாவது ஊர் வந்துவிட்டால் இங்கு சற்று நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், இங்கு கட்டணம் செலுத்தி தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். அத்தனை பணம் என்னிடம் இல்லை. அரசு மையத்தில் முறையான பாதுகாப்பு இருக்குமா எனத் தெரியவில்லை. ஒரே கூடத்தில் தங்க வைக்கும்போது, நோய்த் தொற்று அபாயமும் இருக்கும் என்ற அச்சமும் இருக்கிறது’ என்றார்.

`கட்டண க்வாரன்டீன்; டெல்லிக்கே திரும்பிய சோகம்!’ - ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பெங்களூரு

மேலும் பலர், க்வாரனன்டீன் குறித்து தங்களுக்கு முன்னதாகவே தெரிவிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். எனினும், ரயில்வே தரப்பில் பேசிய அதிகாரிகள், டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே, `சென்று சேரும் இடங்களில் மாநில அரசுகளின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்’ என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது என்றனர்.

மற்றொரு நபர், ``நான் பணம் கட்டி தனிமைப்படுத்திக்கொள்கிறேன். ஆனால் கட்டணங்கள் மிக அதிகமாக இருக்கிறது. ஒருநாள் உணவுக்கே பெரும் தொகை வாங்குகிறார்கள். இது எங்களுக்கு ரமலான் நோன்பு காலம். இப்போது குறைவாகத்தான் உணவு எடுத்துக் கொள்வோம். ஆனாலும் அதே பணம்தான் கட்டவேண்டும் என்கிறார்கள்” என்றார். பெரும்பாலோனோர், இந்த க்வாரன்டீன் குறித்து முன்னரே தெரிந்திருந்தால், நாங்கள் டெல்லியிலே இருந்திருப்போம் என்றனர். சுமார் 19 பேர் வேறு வழியின்றி மீண்டும் வந்த ஊருக்கே பயணமானார்கள். இந்தத் தகவலை இந்திய ரயில்வே உறுதி படுத்தியுள்ளதாக ஏ.என்.ஐ ஊடகம் தெரிவித்துள்ளது.

`கட்டண க்வாரன்டீன்; டெல்லிக்கே திரும்பிய சோகம்!’ - ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பெங்களூரு

இந்த நிலையில் முன்னதாக ரயில்வே நிர்வாகம் தங்களுக்கு சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டை தென் மேற்கு ரயில்வே மறுத்திருக்கிறது. டெல்லியில் இருந்து பெங்களூருக்கு பயணமான அனைத்துப் பயணிகளுக்கும் ஆலோசனை நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. அதில் க்வாரன்டீன் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசு முறையான திட்டமிடுதலுடன் இதை அணுக வில்லை என மக்கள் பலரும் குற்றம்சாட்டினர். ஆனால், பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் சில வழிமுறைகளைக் கடந்த 11-ம் தேதியே மாநில அரசு வெளியிட்டுள்ளதாக அரசு தரப்பு அதிகாரிகள் தெர்வித்தனர். 12-ம் தேதிதான் டெல்லியில் இருந்து ரயில் கிளம்பியதாகவும் குறிப்பிடும் அவர்கள், மாநில மக்கள் நலன் சார்ந்தே இந்த நடவடிக்கைகளை எடுப்பதாகத் தெரிவித்தனர். சில மாநில அரசுகள், கொரோனா அறிகுறி இல்லாதோரை வீட்டில் தனிமைப்படுத்த வழிமுறைகளை வகுத்துள்ளது. இந்தப் போராட்டத்தால் நேற்று முழுவதும் பெங்களூரு ரயில் நிலையம் பரபரப்பாகக் காணப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு