Published:Updated:

`360 டிகிரி இணைப்பு; 2024-ம் ஆண்டே குறி!' - பா.ஜ.க-வுடன் இணைந்த பவன் கல்யாண்

பவன் கல்யாண்
பவன் கல்யாண்

ஆந்திராவில், நடிகர் பவன் கல்யாண் கட்சியான ஜனசேனாவும் பா.ஜ.க-வும் கூட்டணி வைத்துள்ளன. பவன், கடந்த வாரம் டெல்லி சென்று திரும்பிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அடுத்தபடியாக அங்கு அதிக கவனம் ஈர்த்த அரசியல் கட்சித் தலைவராக உருவாகியுள்ளார், ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண். தெலுங்குத் திரையுலகில் மிக முக்கிய நடிகராக உள்ள இவர், கடந்த 2014-ம் ஆண்டு முதல் கட்சி தொடங்கி அரசியலிலும் கால்பதித்தார்.

பவன் கல்யாண்
பவன் கல்யாண்

ஆந்திர அரசியலைப் பொறுத்தவரை தற்போது இவருக்கும் மவுசு அதிகமாகிவிட்டது எனக் கூறப்பட்ட நிலையில், கடந்த வருடம் நடந்த சட்டமன்றத் தேர்தல் பவன் கல்யாணுக்கு பெரும் அடி விழுந்தது. அந்தத் தேர்தலில் வெறும் 6% வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். பவனைப் பொறுத்தவரை, ஆந்திரத்தின் பிரதான கட்சிகள் அனைத்தையும் எதிர்த்துத் தனி ஆளாகக் களம் கண்டார். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரண்டு கட்சிகளையும் விமர்சித்து தேர்தல் பரப்புரை செய்துவந்தார்.

அந்தச் சமயத்தில், இவர் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கவுள்ளதாகவும் ஜனசேனா தான் ஆந்திர பா.ஜ.க-வின் பி டீம் என்றும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்துவந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆந்திரக் கட்சிகளுடன் சேர்த்து பா.ஜ.க-வையும் விமர்சித்துவந்தார். இதனால் இவர் பா.ஜ.க-வுடன் இணைய மாட்டார் எனக் கூறப்பட்டுவந்தது.

ஜனசேனா - பா.ஜ.க கூட்டணி
ஜனசேனா - பா.ஜ.க கூட்டணி

இந்நிலையில், பவன் கல்யாண் திடீரெனக் கடந்த வாரம் பா.ஜ.க தேசிய செயல் தலைவர் ஜே.பி நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இவர்களின் சந்திப்பு, ஆந்திர அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையில், நேற்று ஆந்திர பா.ஜ.க தலைவர் சுனில் தியோதர் மற்றும் பவன் கல்யாண் ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

`அம்பேத்கர் கனவு; திடீர் ட்விஸ்ட்!’ - ஜே.பி.நட்டாவைச் சந்தித்த பவன் கல்யாண்

அப்போது, பா.ஜ.க-வும் ஜனசேனா கட்சியும் கூட்டணி அமைத்துள்ளதாகத் தெரிவித்தனர். இனி வரும் தேர்தலில் இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்படவுள்ளதாகவும் கூறினர். இதில் பேசிய சுனில் தியோதர், “இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாள், பா.ஜ.க-வும் ஜனசேனாவும் கூட்டணி அமைத்துள்ளது. சாதி அரசியல், குடும்ப அரசியல் மற்றும் ஊழல் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நாங்கள் இணைந்து போராடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஜனசேனா - பா.ஜ.க கூட்டணி
ஜனசேனா - பா.ஜ.க கூட்டணி

பவன் கல்யான், 360 டிகிரியில் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துள்ளதாகவும் 2024-ம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலைக் குறிவைத்தே செயல்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க - ஜனசேனா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக பவன் கல்யாண் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டணி பற்றிப் பேசியுள்ள பவன் கல்யாண், “ 2014-ம் ஆண்டுக்குப் பிறகு எங்களுக்கும் பா.ஜ.க-வுக்கும் சரியான தொடர்பு இல்லாமல் போய்விட்டது. ஆனால், சமீபகாலமாக எனக்கு சில பா.ஜ.க தலைவர்களின் நட்பு கிடைத்தது. அதன்மூலம் டெல்லியில் உள்ள மூத்த தலைவர்களையும் சந்தித்து ஆந்திராவின் நலன் குறித்துப் பேசினேன். இனி, பா.ஜ.க-வும் ஜனசேனாவும் இணைந்து ஆந்திராவின் எதிர்காலத்துக்காகப் பாடுபடும்” என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு