Published:Updated:

`3 திருமணங்கள்; 3 உயர் ஆலோசனைக் கூட்டங்கள்!'- என்கவுன்டருக்கு முன்னதாகக் கொந்தளித்த கே.சி.ஆர்

சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்

ஹைதராபாத் என்கவுன்டர் விவகாரம் தொடர்பாக, அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தெலங்கானா மக்களின் நம்பிக்கைக்குரிய முதல்வராகப் பார்க்கப்பட்டவர், சந்திரசேகர ராவ். தன் மாநில மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் உரிய நேரத்தில் வழங்கி, சிறந்த முதல்வராக மக்கள் மனத்தில் இடம் பிடித்துவந்தார். ஆனால், சமீபகாலமாக இவரின் நடவடிக்கைகள் தெலங்கானா மக்களை சிரமத்தில் ஆழ்த்தியுள்ளன.

என்கவுன்டர் செய்யப்பட்டவர்கள்
என்கவுன்டர் செய்யப்பட்டவர்கள்

முன்னதாக, போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், அவர்களைக் கூண்டோடு பணிநீக்கம் செய்தார். முறையான போக்குவரத்து வசதி இல்லாமல் அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வேலை இழந்ததால் பல ஊழியர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இவை அனைத்துக்கும் சந்திரசேகர ராவின் கடுமையான நடவடிக்கைதான் காரணம் என தெலங்கானா மக்கள் கொந்தளித்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் தெலங்கானாவில் ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து முதல்வர் சந்திரசேகர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனால், அம்மாநில மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். பெண் மருத்துவர் கொலை விவகாரம் நடந்தபோது, கே.சி.ஆர் டெல்லியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்தார். அப்போது, வன்கொடுமை விவகாரம் பற்றி அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.

பெண் மருத்துவர்
பெண் மருத்துவர்

இதையடுத்து, கடந்த வார இறுதியில் தெலங்கானா வந்த அவர், அதன் பிறகாவது பெண் மருத்துவர் பற்றிப் பேசுவார், அவரது குடும்பத்தினரைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதைப் பற்றியும் கவலைப்படாமல், மேலும் இரண்டு திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருடன் போனில்கூட அவர் பேசவில்லை.

12 மணி முதல் விசாரணை; 6 மணிக்கு தப்பி ஓட்டம்! - எப்படி நடந்தது ஹைதராபாத் என்கவுன்டர்? #DishaCase

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை, பெண் மருத்துவர் வழக்கில் விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். அவர் இந்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு, பெண் மருத்துவர் விவகாரம் தொடர்பாக 3 முறை உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், விரைந்து செயல்படாத காவல்துறையினர் மீது அதிருப்தி தெரிவித்ததாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்கவுன்டர் நடந்த இடம்
என்கவுன்டர் நடந்த இடம்
ANI

இதுபற்றி 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஊடகத்திடம் பேசியுள்ள அதிகாரிகள், `` பெண் மருத்துவர் கொலை விவகாரம் தொடர்பாக மூன்று முறை உயர் அதிகாரிகளை வரவழைத்து முதல்வர் பேசினார். சம்பவம் எப்படி நடந்தது, போலீஸார் எப்படிச் செயல்பட்டனர் என்பன போன்ற அனைத்து விவரங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

இதன்பின்னர், போலீஸாரின் நடவடிக்கைமீது அதிருப்தி தெரிவித்த முதல்வர், `அவர்கள் விரைந்து செயல்பட்டிருந்தால் உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம்' எனக் கூறினார். இந்தக் கொலையில் தொடர்புடையவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்க அரசு தீவிரமாக இருந்தது. இந்த வழக்கைப் பொறுத்தவரை காவலர்களின் எண்ணமும் முதல்வரின் எண்ணமும் ஒன்றாகவே இருந்தது” என்று கூறியுள்ளனர்.

இதற்கிடையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கே.சி.ஆரின் மகனும் தெலங்கானா அமைச்சருமான கே.டி.ஆர், ``குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்க தெலங்கானா அரசு அனைத்து வகையிலும் முயற்சி செய்யும். ஆனால், பிறர் கூறுவது போல குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்ற நடவடிக்கையை உடனடியாக நாங்கள் கையில் எடுக்க முடியாது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேசியிருந்தார்.

என்கவுன்டர் நடந்த இடம்
என்கவுன்டர் நடந்த இடம்
ANI

இந்த நிலையில்தான், இன்று ஹைதராபாத் பெண் மருத்துவர் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் மீது என்கவுன்டர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுநாள் வரை சந்திரசேகர ராவையும் அவரது அரசையும் விமர்சித்துவந்த மக்கள், இன்று இந்த என்கவுன்டரைப் பாராட்டி வருகின்றனர். `சந்திரசேகர ராவ் எதுவும் பேசாமல் தன் செயலால் மக்கள் மனதை மீண்டும் வென்றுவிட்டார்' போன்ற கருத்துகள் பரவலாக சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. முதல்வருக்குக் கிடைத்துள்ள வரவேற்பு, அம்மாநில காவல்துறையினருக்கும் கிடைத்துள்ளது. பொதுமக்கள் காவலர்களைக் கொண்டாடியும் அவர்கள்மீது மலர்கள் தூவியும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். இதற்கு, மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு