Published:Updated:

பீகார்: `பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி!’ - கழுத்தளவு தண்ணீரில் இறங்கி மீட்ட மக்கள்

வெள்ளத்தின் நடுவே அழைத்து செல்லப்படும் கர்ப்பிணி பெண்
வெள்ளத்தின் நடுவே அழைத்து செல்லப்படும் கர்ப்பிணி பெண் ( ndtv )

``தர்பாங்கா மாவட்ட அதிகாரிகள் இந்தச் செய்தியை அறிந்த உடன் கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினருக்காகப் பேரிடர் நிவாரணப் படையினரை அனுப்பியுள்ளனர். அவர்கள் வந்து உதவி செய்ததாகக் கூறப்படுகிறது.”

கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்து வருகிறது. இதைப்போல மழை, இடி-மின்னல், வெட்டுக்கிளி தாக்குதல் மற்றும் நிலநடுக்கும் எனப் பல்வேறு இயற்கை சீற்றங்களும் மக்களை அதிகளவில் பாதித்து வருகிறது. குறிப்பாக, கடந்த பல நாள்களாக அஸ்ஸாம் மற்றும் பீகார் மாநிலங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன. இரு மாநிலங்களிலும் வைரஸ் வழக்குகளும் அதிகமாகி வருகின்றன. இதனால், வெள்ளத்தையும் கொரோனா வைரஸையும் எதிர்த்துப் போராட வேண்டிய நிலை இந்த இரு மாநிலங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கையும் அதிகமாகப் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

வெள்ளம்
வெள்ளம்
Photo: AP (மாதிரிப்படம்)

பீகார் மாநிலத்தில் தர்பாங்கா எனும் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டம் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்துள்ளார். அவரை அவசரமாக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால், அவர்கள் இருக்கும் இடத்தைச் சுற்று கழுத்தளவு தண்ணீர் இருந்துள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி அருகில் பலகை மற்றும் ரப்பர்களால் செய்யப்பட்ட சிறிய படகு போன்ற ஒன்றைக் கொண்டு வந்து பெண்ணை அழைத்து செல்ல உதவியுள்ளனர். இதுதொடர்பாக வெளியான புகைப்படத்தில், படகில் கர்ப்பிணிப் பெண் அமர்ந்து அவரின் தாயைக் கெட்டியாகப் பிடித்துள்ளார். சிலர் தண்ணீரில் இறங்கி நின்று கயிறு ஒன்றைப் பிடித்தபடி அவர்கள் கரையைக் கடக்க உதவி செய்கின்றனர்.

வெள்ளம்
வெள்ளம்
PTI (மாதிரிப்படம்)

தர்பாங்கா மாவட்ட அதிகாரிகள் இந்தச் செய்தியை அறிந்த உடன் கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினருக்காக பேரிடர் நிவாரணப் படையினரை அனுப்பியுள்ளனர். அவர்கள் வந்து உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. பீகாரில் மிகவும் மோசமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தர்பாங்காவும் ஒன்றும். பருவ மழை தொடங்கி பாதி நாள்கள் ஆவதற்கு முன்பே இந்தப் பகுதி வெள்ளத்தால் மூழ்கத் தொடங்கியதாகக் கூறுகின்றனர். அம்மாநில முதல்வர் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் மாவட்ட அதிகாரிகளை எச்சரிக்கையுடன் இருக்கும்படி கெட்டுக்கொண்டுள்ளார். மக்களை உயர்வான பகுதிகளை நோக்கி அழைத்துச் செல்லவும் அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கர்ப்பிணிப் பெண்ணுக்கு அக்கம்பக்கத்தினர் உதவி செய்துள்ள சம்பவம் பலரையும் நெகிழச் செய்துள்ளது.

Credits : Ndtv

54 லட்சம் பேரை அகதிகளாக்கிய வெள்ளம்... சாலைகளில் அலையும் காட்டுயிர்கள்... தத்தளிக்கும் அஸ்ஸாம்!
அடுத்த கட்டுரைக்கு