Published:Updated:

`ஒரு பூஜ்ஜியம் அதிகமாயிடுச்சு; தப்பாயிடுச்சு!’ - கேரள மழை நிவாரண நிதியைத் திரும்பக் கேட்கும் 97 பேர்

கேரள மழை
கேரள மழை

ஆன்லைன் வழியாகப் பணம் செலுத்திய போது இந்த அக்கவுன்டில் தவறுதலாக வந்துவிட்டது எனவும். ஒரு பூஜ்ஜியம் அதிகமாகப் போட்டுவிட்டோம். எனவே அந்தத் தொகை போக மீதிப் பணம் திரும்ப வேண்டும் எனவும் பல காரணங்கள் கூறப்பட்டுள்ளன.

கேரளத்தில் 2018-ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளம் மாநிலத்தையே புரட்டிப்போட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் வெள்ளத்தில் மூழ்கியும் நிலச்சரிவிலும் இறந்தனர். சுமார் 10 லட்சம் பேர் வீடுகளைவிட்டு வெளியேறி முகாம்களில் வசித்தனர். லட்சத்துக்கும் மேல் வீடுகள் இடிந்து விழுந்தன. படகுகள் மூலமும் ஹெலிகாப்டர் மூலமும் மக்கள் மீட்கப்பட்டனர். அணைகளிலிருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் ஆற்றின் கரைகளில் இருந்த ஊர்கள் தண்ணீரில் மூழ்கின. கேரளம் மழை வெள்ளத்தால் தவித்தபோது உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் உதவிபுரிந்தனர். தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மக்களும், அரசு நிர்வாகமும் நிவாரணப் பொருள்களை அனுப்பிவைத்தன. பலர் முதலமைச்சர் நிவாரண நிதியாக பணம் அனுப்பி வைத்தனர். நிவாரண நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக ஆன்லைனில் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

கேரள மழை பாதிப்பு
கேரள மழை பாதிப்பு

இந்தநிலையில் பெருவெள்ளத்தின்போது வழங்கிய நிவாரண நிதியைத் திரும்ப வழங்க வேண்டும் எனக் கேட்டு 97 பேர் விண்ணப்பித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 97 பேரும் திருப்பிக் கேட்கும் தொகை 55.18 லட்சம் ரூபாய். பணத்தைத் திருப்பிக் கேட்பவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளனர்.

ஆன்லைன் வழியாகப் பணம் செலுத்தியபோது இந்த அக்கவுன்டில் தவறுதலாக வந்துவிட்டது எனவும் ஒரு பூஜ்ஜியம் அதிகமாகப் போட்டுவிட்டோம். எனவே அந்தத் தொகை போக மீதிப் பணம் திரும்ப வேண்டும் எனவும் பல காரணங்கள் கூறப்பட்டுள்ளன. பணம் திரும்பக் கேட்டதில் 16 பேர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக முதல்வர் நிவாரண நிதிக்கு வரும் தொகை திருப்பிக் கொடுப்பது வழக்கமில்லை என்றும், ஆனால் இவர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவருடன் மழை பாதிப்புகளைப் பார்வையிடும் கேரள முதல்வர் பினராயி விஜயன்
எதிர்க்கட்சித் தலைவருடன் மழை பாதிப்புகளைப் பார்வையிடும் கேரள முதல்வர் பினராயி விஜயன்
பைல் படம்

முதல்வர் நிவாரண நிதிக்குப் பணம் கொடுத்த ரசீதை வைத்து வருமானவரி தாக்கல் செய்துவிட்டு சிலர் பணத்தைத் திரும்பக் கேட்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கேரள தலைமைச் செயலக அதிகாரிகளிடம் நாம் கேட்டபோது, ``இது சம்பந்தமாக விசாரித்து வருகிறோம்" என்று மட்டும் கூறினர்.

அடுத்த கட்டுரைக்கு