Published:Updated:

`அரசியல் அகதியாக நீங்கள் மாற்றப்படுவீர்கள்!’ -மம்தாவை கடுமையாக விமர்சித்த அமித் ஷா

அமித் ஷா
News
அமித் ஷா

``கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவரும் சூழலில், அமித் ஷா காணொலி மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை தற்போதே தொடங்கியுள்ளார்.”

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகக் கடுமையான போராட்டங்கள், கொரோனா வைரஸ் பரவல் ஏற்படுவதற்கு முன்பு நடந்துவந்தன. இந்தப் போராட்டங்களின்போது நடந்த வன்முறைகள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மத்திய மற்றும் மாநில அளவில் உள்ள ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே இந்தச் சட்டம் தொடர்பாகக் கடுமையான மோதல்கள் இருந்துவந்தன.

வைரஸ் பாதிப்பால் இந்தச் சட்டங்கள் குறித்த விவாதங்கள் தற்போது குறைந்துள்ளன. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க கட்சித் தொண்டர்களுடன் உரையாடும்போது, இந்தச் சட்டங்கள் உட்பட பல பிரச்னைகளைக் குறிப்பிட்டு மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் உள்ள பா.ஜ.க தொண்டர்களிடையே அமித் ஷா காணொலி மூலமாக உரையாற்றினார். அமித் ஷா அதில் மேற்குவங்கத்தின் முதல்வரை விமர்சித்துப் பேசும்போது, ``அகதிகளுக்கு வழங்கப்படும் குடியுரிமையை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள். இந்த மாநிலத்தில் உள்ள மக்கள் அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.

மம்தாவிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நீங்கள் தெரிவிக்கும் எதிர்ப்பு, மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கப்போகிறது. வாக்கு எண்ணிக்கைக்கான பெட்டிகள் திறக்கப்படும்போது, மக்கள் உங்களை அரசியல் அகதியாக மாற்றியிருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இந்தச் சட்டத்தை எதிர்த்ததற்கு நீங்கள் கொடுக்கும் விலை, உயர்ந்ததாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தொடர்ந்து பேசிய அமித் ஷா, ``அன்றைய தினம், நான் மம்தாவின் முகத்தைப் பார்த்தேன். அவர் மிகவும் கோபம் உடையவராக இருந்தார். அவருடைய முகம் சிவப்பாக மாறியிருந்தது. நாகரிகம் என்பதை அவர் மறந்துவிட்டார். அதற்கு முன்பு யாரும் இவ்வளவு கோபம் அடைந்து நான் பார்த்ததில்லை. அகதிகள் அவருக்கு என்ன தீங்கு செய்தார்கள் என்பதை நான் அறிய விரும்புகிறேன். அரசியல்ரீதியிலான வன்முறைகளை மேற்கொள்ளும் மாநிலமாகவும் மேற்கு வங்கம் உள்ளது. இந்த மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல மாற்றங்கள் தேவை. கம்யூனிஸ்ட்களுக்கு 34 வருடமும் மம்தாவுக்கு 10 வருடமும் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்துள்ளீர்கள். இனி மோடிக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள். பா.ஜ.க-வால் மட்டுமே இங்கு மாற்றங்களைச் செய்ய முடியும். உத்தரப் பிரதேசம் வெறும் மூன்று ஆண்டுகளில் முன்னேற்றத்தை சந்தித்து வருகிறது” என்றும் குறிப்பிட்டார்.

மேலும், ``கொரோனா தொடர்பான ஊரடங்குக்கு மத்தியிலும் வன்முறைகள் நடைபெற்ற ஒரே மாநிலம் மேற்குவங்கம்தான். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதும் அக்கறையற்ற ஒருவராக செயல்படுகிறார். மம்தா பானர்ஜி, சிறப்பு ரயில்களை `கொரோனா எக்ஸ்பிரஸ்’ என்று அழைத்தார். இது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவமானம். தொழிலாளர்கள் சரியான நேரத்தில் இதற்கான பதிலடியைக் கொடுப்பார்கள். வன்முறைகள், ஊழல், மோசடிகள், பயங்கரவாத ஊடுருவல்கள் என அனைத்துக்கும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகளில் முடிவு கிடைக்கும். இதனை நீங்கள் விரும்பினால், மோடிக்கு உரிமையை நீங்கள் கொடுக்க வேண்டும்” என்று பேசினார்.

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

அமித் ஷாவின் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி, ``அமித் ஷா ஜி, நெருக்கடியான இந்தக் காலத்தில் நீங்கள் பேசுவதை வங்காளம் கேட்கப்போவதில்லை” என்று கூறியதுடன் சீனா உடனான எல்லைப் பிரச்னை குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளார். தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த பல தலைவர்களும் அமித் ஷாவின் பேச்சுக்கு தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பார்த்தா சட்டர்ஜி, ``தொற்றுநோய் மற்றும் இயற்கை பேரிடர்களுக்கு எதிராக மாநிலம் கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அமித் ஷா எதற்கு முன்னுரிமை அளிக்கிறார் என்பது தெளிவாக உள்ளது. வாக்குகளைப் பெற பசியுடன் இருக்கும் இந்த மனிதரின் முகத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

இந்தியாவில், கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவரும் சூழலில், அமித் ஷா காணொலி மூலமாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை தற்போதே தொடங்கியுள்ளார். களத்துக்குச் சென்று மக்களை ஒருங்கிணைத்துப் பேசும் வாய்ப்பு இல்லாததால், காணொளியின் மூலமாக அதைச் செய்துவருகிறார் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.