Published:Updated:

`இப்படித்தான் இருக்கும் இவர்களின் போராட்டம்!’ - கவனம் ஈர்த்த ஜேஎம்இ மாணவர்கள் #Viral

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களின் செயல் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள்
ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள்

டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் கடந்த ஞாயிற்றுகிழமையன்று போர்க்களம் போல் காட்சியளித்தது. ஒட்டுமொத்த இந்திய மக்களின் கவனமும் டெல்லி ஜேஎம்இ பல்கலைக்கழகத்தின் மீது திரும்பியது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் மீதான டெல்லி காவல்துறையினர் அத்துமீறல்களே இதற்கு காரணமாக அமைந்தது. ``நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கிறோம் எங்களைக் காப்பாற்றுங்கள்” என மாணவர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்ட வீடியோக்கள் காண்போரை அதிர்ச்சியடைய வைத்தது.

ஜேஎம்இ பல்கலைக்கழக மாணவர்கள்
ஜேஎம்இ பல்கலைக்கழக மாணவர்கள்

டிசம்பர் 15-ம் தேதி மாலை பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த காவல்துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். கழிவறையிலிருந்து ரத்தக்காயங்களுடன் மாணவர்கள் மீட்கப்பட்டனர். பல்கலைக்கழக வளாகங்களைப் பார்த்தாலே அங்கு என்ன நடத்திருக்கும் என யூகிக்க முடியும். ஏராளமான மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையின் நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. `பேருந்தை கொளுத்தினார்கள், கல் எறிந்தார்கள் வேறுவழியின்றி பல்கலைக்கழகத்துக்குள் சென்றோம். வதந்திகளை நம்ப வேண்டாம்’ - இதுதான் காவல்துறையின் விளக்கமாக உள்ளது.

மாணவர்களிடம் காவல்துறையினர் நடந்துகொண்ட விதம் விவாதத்துக்குள்ளாகியுள்ளது. டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக நாட்டில் உள்ள பல்வேறு மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் இறங்கினர். நேற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் ஜேஎம்இ மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் வேறு சில கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் இணைந்தனர்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தியும் மனிதச் சங்கிலி அமைத்தும் முழக்கமிட்டனர். இரவில் அனைவரும் கலைந்து சென்ற பின்னர் ஜேஎம்இ மாணவர்கள் பல்கலைக்கழக வீதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக சாலையில் சேர்ந்திருந்த குப்பைகளை மாணவர்களே அகற்றினர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. `இதுதான் மாணவர்கள்’, `மாணவர்களின் போராட்டம் இப்படித்தான் இருக்கிறது' எனப் பலரும் பாராட்டி ட்வீட் செய்து வருகின்றனர்.