Published:Updated:

105ஐ தொட்ட கொரோனா பாதிப்பு... இளைஞர்களின் உதவியை எதிர்நோக்கும் பினராயி!

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் ஆறுபேர் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மாநிலத்தில் 72460 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அதில் 467 பேர் மருத்துவமனையில் வைத்துக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்

கேரளத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நூறைக் கடந்துள்ளது. இதைத் தொடர்ந்து கேரள அரசு கடும் தடுப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கேரளத்தில் மேலும் 14 பேருக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது மொத்தம் 105 பேர் கொரோனா மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் ஆறுபேர் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மாநிலத்தில் 72, 460 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அதில் 467 பேர் மருத்துவமனையில் வைத்துக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்னையை நம் மாநிலம் எதிர்கொள்வது முதன் முறை என்பதால் யாரும் தேவையில்லாமல் வாகனங்களில் பயணிக்கக்கூடாது. ஐந்துக்கு அதிகமானவர்கள் பொது இடங்களில் கூடக்கூடாது. உறவினர் வீடுகளில் கூடியிருந்து பேசுவதை தவிர்க்க வேண்டும். உணவுப் பொருள்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா
கொரோனா

வீடுகள் இல்லாமல் சாலை ஓரம் வசிப்பவர்கள் தங்குவதற்கும், உணவு வழங்கவும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகளில் தேவையான மளிகைப் பொருள்கள் இருப்பு உள்ளதா என்பது குறித்து அறிய வணிகர்களுடன் கலந்து பேச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் வசிப்பவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவும், வீடுகளில் தனியாக வசிக்கும் முதியவர்களின் நலம் குறித்தும் கண்காணிக்க எம்.எல்.ஏக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தி நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அவர்கள் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதே சமயம் நியூஸ் பிரின்ட் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு வருவதில் மாநில எல்லைப்பகுதிகளில் தடங்கல் ஏற்படுவதாகப் புகார் தெரிவித்துள்ளனர். பொருள்கள் தடங்கல் இல்லாமல் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு
பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு

உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான கடைகளை வாடகை எடுத்தவர்களுக்கு இரண்டு மாதம் வாடகை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. கோவிட் 19-க்குத் தனி மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டு அனைத்து நோயாளிகளையும் அங்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தாய் உள்ளத்தோடு இளைஞர்கள் ரத்த தானம் போன்றவை செய்ய வேண்டும். இளைஞர்களின் உதவி இப்போது மிகவும் தேவைப்படுகிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு