Published:Updated:

`முன்னுரிமை அடிப்படையில் 1,69,136 பேர்; கண்டுகொள்ளாத மத்திய அரசு!' -கொதித்த பினராயி விஜயன்

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

மாலத்தீவு மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஆட்களை அழைத்து வர மூன்று கப்பல்கள் சென்றுள்ளன. இந்தக் கப்பல்கள் விரைவில் கொச்சி துறைமுகத்துக்கு வரும்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வெளிநாடுகளில் உள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் சொந்த மாநிலத்துக்குத் திரும்ப விண்ணப்பித்துள்ளனர். அவர்களைத் தனிமைப்படுத்தி கண்காணிக்க மாநிலம் முழுவதும் இரண்டரை லட்சம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ``கேரளாவில் புதிதாக மூன்று பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்று திரும்பிய வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில், அந்த டிரைவரின் தாய், மனைவி மற்றும் லாரி கிளீனரின் மகன் ஆகியோருக்கு இப்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளியிடங்களுக்குச் சென்று வருபவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனக்குறைவாக இருந்தால் இதுபோன்ற ஆபத்துகள் ஏற்படும்.

கோவிட் - 19 கொரோனா
கோவிட் - 19 கொரோனா

கேரளாவில் இதுவரை 502 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 37 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 21,342 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 21,034 பேர் வீடுகளிலும், 308 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர்.

கொரோனா அறிகுறிகளுடன் புதிதாக 86 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கண்ணூர் மாவட்டத்தில் 18 பேரும் கோட்டயம் மாவட்டத்தில் 6 பேரும் வயநாடு மாவட்டத்தில் 4 பேரும் கொல்லம் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும் பத்தனம்திட்டா, இடுக்கி மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நான்கு மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை.

வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் 7-ம் தேதி முதல் வெளிநாடுகளிலிருந்து மலையாளிகள் கேரளா திரும்ப உள்ளனர். அடுத்த ஐந்து நாள்களில் 2,280 பேர் கேரளா திரும்புகின்றனர். பல்வேறு நாடுகளிலிருந்து கேரளா திரும்ப இதுவரை 4,42,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் முன்னுரிமை அடிப்படையில் 1,69,136 பேர் அடங்கிய பட்டியல் மத்திய அரசிடம் வழங்கப்பட்டது. ஆனால், அந்தப் பட்டியலை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.

தற்போதைய கணக்கின்படி கேரளாவுக்கு 80,000 பேர் மட்டுமே வர முடியும் என்ற நிலை உள்ளது. விமானங்களில் அழைத்து வரும்போது அனைவருக்கும் சர்வதேச விதிகளின்படி கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும். ஆனால், தற்போது பரிசோதனை எதுவும் நடத்தாமல் அழைத்து வர மத்திய அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது. இப்படி பரிசோதிக்காமல் அழைத்து வந்தால் இந்தியாவில் மேலும் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது. ஒரு விமானத்தில் குறைந்தது 200 பயணிகள் இருப்பார்கள். இவர்களில் ஒருவருக்கு கொரோனா இருந்தால்கூட அனைவருக்கும் பரவ வாய்ப்புள்ளது. எனவே, உரிய பரிசோதனை நடத்திய பின்னரே ஆட்களை விமானத்தில் ஏற்ற வேண்டும் என்று கோரி பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

வெளிநாடுகளிலிருந்து கேரளாவுக்கு வருபவர்கள் தற்போதைய சூழலில் ஒரு வாரம் அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள். பின்னர் அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். இந்தப் பரிசோதனையில் கொரோனா இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ஆனால், வீடுகளிலும் மேலும் ஒரு வாரத்துக்கு தனிமையில் இருக்க வேண்டும். பரிசோதனையில் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களை தனிமையில் தங்க வைப்பதற்காக கேரளா முழுவதும் பல்வேறு பகுதிகளில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்துக்கு அருகில் உள்ள முகாம்களில் மட்டுமல்லாமல் அவர்களது ஊருக்கு அருகில் உள்ள அரசு முகாம்களிலும் தங்கிக் கொள்ளலாம். இதற்காக கேரளா முழுவதும் இரண்டரை லட்சம் படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

இதில் 1,63,000 படுக்கைகள் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளன. மீதி படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். இதற்காக கேரளாவில் பல்வேறு பகுதிகளில் காலியாக கிடக்கும் வீடுகளும் பயன்படுத்தப்படும். மாலத்தீவு மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஆட்களை அழைத்து வர மூன்று கப்பல்கள் சென்றுள்ளன. இந்தக் கப்பல்கள் விரைவில் கொச்சி துறைமுகத்துக்கு வரும்.

துபாயிலிருந்து திரும்பிய 29வது நாளில் இளைஞருக்குக் கொரோனா பாசிட்டிவ்! - அதிர்ச்சியில் கேரளா

துறைமுகத்தில் வருபவர்களுக்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இவர்களில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த யாராவது இருந்தால் அவர்களை அவர்களது மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிற மாநிலங்களிலிருந்து கேரளாவுக்கு 3,363 மலையாளிகள் வந்துள்ளனர். வெளிமாநிலங்களில் உள்ள சிவப்பு மண்டலத்தில் இருந்து வருபவர்கள் கேரளாவில் கண்டிப்பாக ஒரு வாரம் அரசு முகாம்களில் தங்கி இருக்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு