Published:Updated:

`வெளிநாட்டில் வாழும் மலையாளிகளுக்கு ஆன்லைன் மருத்துவம்!' -பினராயி விஜயன் அடுத்த அதிரடி

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் கொரோனாவால் மரணமடையும் தகவல்கள் வந்துள்ளன. எனவே, கேரள மக்கள் அதிகமாக வாழும் வெளிநாடுகளில் ஆன்லைன் மூலம் ஐந்து மருத்துவ உதவி மையங்கள் திறக்கப்படுகின்றன.

வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மக்கள் கொரோனாவால் இறப்பதைத் தடுக்க கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஹெல்ப் டெஸ்க் மற்றும் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை வழங்கவும் கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ``கேரளத்தில் இன்று ஒன்பதுபேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதுவரை 345 பேருக்கு தொற்று ஏற்பட்டது, அதில் 259 பேர் இப்போது சிகிச்சையில் உள்ளனர். மாநிலம் முழுவதும் 1,40,474 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதில் 749 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற 212 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காசர்கோடு மெடிக்கல் காலேஜ் 300 படுக்கை வசதியுடன் கூடிய 24 மணி நேர கொரோனா மருத்துவமனையாக செயல்படுத்தப்படுகிறது. மங்களூருக்கு மருத்துவமனைக்குச் சென்ற நோயாளிகளுக்கு நேர்ந்த சில பிரச்னைகள் நம் கவனத்துக்கு வந்துள்ளன. அதுகுறித்து கர்நாடக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்.

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் கொரோனாவால் மரணமடையும் தகவல்கள் வந்துள்ளன. எனவே, கேரள மக்கள் அதிகமாக வாழும் வெளிநாடுகளில் ஆன்லைன் மூலம் ஐந்து மருத்துவ உதவி மையங்கள் திறக்கப்படுகின்றன. இங்குள்ள டாக்டர்கள் வெளிநாட்டில் உள்ள மலையாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை வழங்கப்படும். இந்திய நேரப்படி தினமும் மதியம் 2 மணி முதல் 6 மணி வரை மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

மருத்துவமனைகளில் ரத்தத்தின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, தன்னார்வலர்கள் ரத்ததானம் வழங்க முன்வர வேண்டும். சாலையில் தடையை மீறி பயணிக்கும் வாகனங்களைப் பறிமுதல் செய்து பாதுகாப்பதில் சிரமம் உள்ளது. எனவே, வாகனங்களைப் பறிமுதல் செய்யாமல் அதிக பைன் போட நடவடிக்கை எடுக்கப்படும். மாஸ்க் மற்றும் கிளவுஸ்களில் வைரஸ் இருக்க வாய்பு உண்டு. எனவே, அவற்றை அலட்சியமாக பொது இடங்களில் போடக் கூடாது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

வனத்தைத் தொட்டுள்ள பகுதிகளில் குரங்கு காய்ச்சல் பரவுவதாகத் தகவல் வந்துள்ளதால் மக்கள் குரங்குகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். கொரோனா பாதித்தவர்களிடம் இருந்து குரங்குகளுக்கு நோய் பரவ வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, குரங்குகளுக்கு உணவு வழங்குபவர்கள் கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். கொரோனாவை எதிர்க்க அனைத்து வழிகளையும் பின்பற்றுகிறோம். கொரோனா சிகிச்சைக்காக ஆயுர்வேதத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு