Published:Updated:

`144 தடை உத்தரவு பிறப்பிக்கும் நிலை ஏற்படும்!' -அலட்சியத்தால் பினராயி விஜயன் ஆவேசம்

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரளத்திலிருந்து தமிழகத்துக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் எல்லைப் பகுதிகளில் தடுக்கப்படுவதாகத் தகவல்கள் வருகின்றன. ஏற்கெனவே தமிழக முதல்வர் கூறியபடி, வாகனங்கள் தடையிலாமல் சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரளத்தில் கொரோனா பரவுவதைத் தடுப்பது குறித்த நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "உலகில் 176 நாடுகளில் கொரோனா பாதித்துள்ளது. கேரளத்தில், மேலும் 12 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. கண்ணூரில் 3 பேர், எர்ணாகுளத்தில் 3 பேர், காசர்கோட்டில் ஆறுபேர் பாதித்துள்ளனர். இவர்கள் அனைவரும் வளைகுடா நாட்டில் இருந்து ஊர் திரும்பியவர்கள். மாநிலத்தில் மொத்தம் 52 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மாநிலம் முழுவதும் 53013 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். 52785 பேர் வீடுகளிலும், 228 பேர் மருத்துவமனைகளிலும் வைத்து கண்காணிக்கப்படுகின்றனர். ஜாதி, மத, அரசியல் பேதம் இல்லாமல் மனிதன் என்ற எண்ணத்துடன் நாம் ஒற்றுமையாக முன்னேறுகிறோம். மத விழாக்கள், நிகழ்ச்சிகளில் மக்கள் கூடக்கூடாது எனக் கூறியதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அனைத்து மதத் தலைவர்களும் கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பலம் சேர்க்கும் விதமாக, சுயமாக பல நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர். கோயில்களில் யானைகள்மீது சுவாமி எழுந்தருளல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. குருவாயூர் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சபரிமலை, வரும் 28-ம் தேதி நடை திறக்கும். ஆனால், பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஏப்ரல் 8-ம் தேதி நடக்கும் பம்பா ஆராட்டு விழாவிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

கொரோனா
கொரோனா
AP

அரசின் நடவடிக்கைகளுக்கு செவிசாய்க்காதவர்களும் இருக்கிறார்கள். பல பகுதிகளில் திருவிழாக்களில் அதிக மக்கள் ஒன்றுகூடிய நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. இதை நீங்கள் கடைபிடிக்காமல் இருந்தால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் நிலை ஏற்படும். சமூகத்தின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு இதுபோன்று கூட்டமாகக் கூடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காசர்கோடு மாவட்டத்தில் வைரஸ் பாதித்தவர் எல்லா இடங்களிலும் சென்றதால், அந்த மாவட்ட நிர்வாகம் அவர் சென்ற இடங்கள் குறித்த ரூட் மேப்பை எடுத்துள்ளது. அவரிடம் பலமுறை கவுன்சிலிங் நடத்தியும் சரியான தகவல்களை அளிக்கவில்லை. இதுபோன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவரைப்போன்று அரசின் நடவடிக்கைகளை மதிக்காமல் நடப்பவர்களின் தவறான வாதத்தை சமூக நலன் கருதி மீடியாக்கள் ஒளிபரப்ப வேண்டாம்.

இத்தாலி, உலகத்தில் பணக்கார நாடு, முன்னேறிய நாடு, ஜி.டி.பி -யின் 10 சதவிகிதம் மருத்துவத்துக்கென ஒதுக்கிவைத்த நாடு. நிறைய மருத்துவமனைகளும் உண்டு. இருப்பினும் அங்கு வேகமாக கொரோனா பரவிவருகிறது. இத்தாலியில் இறந்தவர்கள் எண்ணிக்கை சீனாவைக்காட்டிலும் மிஞ்சியுள்ளது. எனவேதான் நாம் கொரோனாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சிலர், இப்போதும் கொரோனாவின் தீவிரத்தை உணராமல் இருப்பதுதான் வேதனை. வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மக்களின் தொடர்பு குறைய வேண்டும்.

பினராயி விஜயன் பிரஸ் மீட்டில் செய்தியாளர்களுக்கு இடைவெளி விட்டு இருக்கை
பினராயி விஜயன் பிரஸ் மீட்டில் செய்தியாளர்களுக்கு இடைவெளி விட்டு இருக்கை

தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் தனிக் கவனம் வேண்டும். சில வீடுகளில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர் இருந்தால், அவர்கள் தனி இடத்தில் வசிப்பது நலம். கேன்சர் உள்ளிட்ட நோய் உள்ளவர்கள் வீட்டில் இருந்தால் கொரோனா கண்காணிப்பில் இருப்பவர்களை அவரது வீட்டுக்கு அனுப்பாமல் தனி இடத்தில் வைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கேரளத்தில் இருந்து தமிழகத்துக்குச் செல்லும் சரக்கு வாகனங்கள், எல்லைப் பகுதிகளில் தடுக்கப்படுவதாகத் தகவல்கள் வருகின்றன. ஏற்கெனவே தமிழக முதல்வர் கூறியபடி, வாகனங்கள் தடையிலாமல் சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருள்கள் கிடைக்காது என சிலர், பொருள்களை வாங்கி சேர்க்கிறார்கள். மக்களின் அன்றாட தேவைகளுக்கான பொருள்கள் தடையில்லாமல் கிடைக்கும்.

அதுபோல, வீடுகளுக்கு பொருள்களைக் கொண்டுபோய் கொடுக்க வேண்டும் என்று வர்த்தகர்களிடம் வலியுறுத்தியுள்ளேன். மலேசியா கோலாலம்பூரில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விமானம் கிடைக்காமல் தவிப்பதாகத் தகவல் வந்துள்ளது. அதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வங்கிகளில் கூட்டத்தை குறைக்கும் விதமாக ஏடிஎம்-களில் பணம் நிரப்பப்பட்டதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு