Published:Updated:

`சித்திரை கைநீட்டத்தைக் கொரோனா நிதியாக வழங்குங்கள்!' - பினராயி விஜயன் வேண்டுகோள்

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

ஊரடங்கு தடையை நீக்கலாம் என்ற எண்ணம் சிலபகுதிகளில் ஏற்பட்டுள்ளது. அப்படி செய்வது ஆபத்தானது. நம் மாநிலத்தில் தடை தொடருகிறது.

சித்திரை ஒன்றாம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக நாம் சிறப்பாகக் கொண்டாடுவது போன்று கேரள மாநிலத்தில் விஷூ கணிகாணுதல் என மிகச்சிறப்பாகக் கொண்டாடுவார்கள். வீடுகளில் காய்கனிகளை வைத்து கணிகாணுதல் மற்றும் பெரியவர்கள் சிறுவர்களுக்கும், பிறருக்கும் பணம் கொடுக்கும் "கை நீட்டம்" முக்கிய நிகழ்வாக அமையும். அப்படி கை நீட்டமாக வழங்கும் பணத்தைக் கொரோனா நிவாரண நிதியாக வழங்க வேண்டும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ``நாளை சித்திரை விஷூ தினமும், அம்பேத்கரின் 129-வது ஜயந்தி தினமும் ஒரே நாளில் வருகிறது. விஷூ தினத்தின் முக்கிய நிகழ்வு ஒருவருக்கு ஒருவர் கைநீட்டம் (பணம்) வழங்குதல். அசாதாரணமான இந்தச் சூழ்நிலையில் சித்திரை கைநீட்டத்தை முதலமைச்சரின் பேரிடர் நிதிக்கு வழங்குங்கள். இதைப் பெரியவரும் குழந்தைகளும் கடைப்பிடியுங்கள். நாட்டின் துயரத்தைத் துடைக்கும் எண்ணத்துடன் அனைவரும் செயல்படுவோம். கேரளத்தில் இன்று மூன்று பேருக்குக் கொரோனா பாதித்துள்ளது. ஏற்கெனவே சிகிச்சையில் இருந்த 19 பேருக்குக் கொரோனா குணமாகி நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. மாநிலத்தில் 378 பேருக்குக் கொரோனா பாதித்தது. அதில் 178 பேர் இப்போது சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா
கொரோனா

புதிதாக கொரோனா பரவும் நபர்களின் எண்ணிக்கை குறைகிறது, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் ஊரடங்கு தடையை நீக்கலாம் என்ற எண்ணம் சிலபகுதிகளில் ஏற்பட்டுள்ளது. அப்படி செய்வது ஆபத்தானது. நம் மாநிலத்தில் தடை தொடருகிறது. இதுசம்பந்தமாக நாளை காலை பிரதமர் மக்களிடம் பேசுகிறார். அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

வெளிநாட்டில் உள்ள மலையாளிகளை இங்கு அழைத்து வருவது நமக்கு இப்போதைய முக்கியப் பிரச்னையாக உள்ளது. அவர்களை அழைத்து வருவது சம்பந்தமாக இன்றும் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். அவர்களை இங்கு அழைத்துவர தனி விமானம் ஏற்பாடுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கான கொரோனா சோதனை, அவர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளோம்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கோட்டயம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் எலி காய்ச்சல், டெங்குக் காய்ச்சல் ரிப்போர்ட் ஆனது குறித்து கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. லட்சத் தீவைச் சேர்ந்தவர்கள் கேரளத்தில் நிறையபேர் உண்டு. அவர்களுக்கு இப்போது பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கான உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு