Published:Updated:

`ஆபத்தானது... ஆராய்ச்சி மற்றும் சோதனைக்கு மட்டுமே அனுமதி’ - பிளாஸ்மா சிகிச்சை குறித்து மத்திய அரசு

பிளாஸ்மா
பிளாஸ்மா

`பிளாஸ்மா தெரபியை முறையாக அல்லது சரியாக வழங்காமல் போனால், அது நோயாளியின் உயிருக்கு ஆபத்தாக போய்விடும்’ - மத்திய சுகாதாரத்துறை

பிளாஸ்மா தெரபி சிகிச்சை... இந்தப் பெயரை கடந்த சில நாள்களாகக் கேட்டு கடந்து வந்திருப்போம். கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு இந்தச் சிகிச்சையை மத்திய அரசு பரிந்துரைத்ததாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிலருக்கு இந்த முறை சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், அதில் பலன் கிடைத்ததாகவும் சில செய்திகள் வெளியாகின. வெளியான தகவல்கள் எதுவும் பொய்யான தகவல் அல்ல. இந்த நிலையில் மத்திய அரசு பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்குத் திடீரென தற்காலிக தடை விதித்துள்ளது.

பிளாஸ்மா தானம்
பிளாஸ்மா தானம்

பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறை:

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்த நோயாளியின் உடலில் இருக்கும் ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு உடலில் செலுத்தும் முறைதான் பிளாஸ்மா சிகிச்சைமுறை. கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்களின் உடலில் உள்ள எதிர்ப்பு புரதத்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்காரணமாக கொரோனா நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களில் உடலில் எதிர்ப்புசக்தி அதிகரித்து கொரோனாவுக்கு எதிராகப் போராட அவர்களது உடல் தயாராகிறது என இந்தச் சிசிக்கை தொடர்பாகத் தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

பிளாஸ்மா தெரபிக்காக கொரோனாவில் இருந்து மீண்ட சிலர் தானாக முன் வந்து பிளாஸ்மா தானம் வழங்கினர். ``கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த ஒருவர் தனது பிளாஸ்மாவை தானமளிக்க விரும்பினால், அவரிடம் இருந்து 400 மில்லி பிளாஸ்மா எடுக்கலாம். அப்படி எடுக்கப்படும் பிளாஸ்மா மூலம் கொரோனா தொற்றில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இரண்டு நபர்களுக்கு சிகிச்சை வழங்க முடியும்” என்கிறார்கள் மருத்துவர்கள்.

பிளாஸ்மா தானம் வழங்கிய ஸ்மிரிதி தாக்கர் என்ற பெண்
பிளாஸ்மா தானம் வழங்கிய ஸ்மிரிதி தாக்கர் என்ற பெண்

டெல்லியில் முதல் முதலாக பிளாஸ்மா தெரபி முறையில் சிகிச்சை வழங்கப்பட்ட 49 வயது நபர் கடந்த ஞாயிறு அன்று கொரோனா தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இந்த நிலையில் நேற்று மத்திய அரசு பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறையை ஆபத்தானது எனக் குறிப்பிட்டிருக்கிறது.

`12 நாளில் வென்டிலேட்டர் டு ஹோம் க்வாரன்டைன்!’ -பிளாஸ்மா தெரபி மூலம் குணமடைந்த முதல் இந்தியர்

நேற்று மத்திய சுகாதாரத்துறையின் செய்தியாளர் சந்திப்பில், கொரோனாவுக்கு எதிரான வழக்கமான சிகிச்சை முறையாக பிளாஸ்மா தெரபி சிகிச்சை தற்போது இருக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லாவ் ஆகர்வால், ``கொரோனாவுக்கு எதிராக நாட்டில் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற சிகிச்சை முறை என எதுவும் தற்போது வரை எதுவும் இல்லை. பிளாஸ்மா தெரபி குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

லாவ் அகர்வால்
லாவ் அகர்வால்

தற்போது வரையில் கொரோனாவுக்கு எதிராக அது சிறப்பாகச் செயல்படுவதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. அது இன்னும் ஆய்வு நிலையில்தான் இருக்கிறது. பிளாஸ்மா தெரபியை முறையாக அல்லது சரியாக வழங்காமல் போனால், அது நோயாளியின் உயிருக்கு ஆபத்தாக போய்விடும்” என்றார்.

பிளாஸ்மா சிகிச்சையின் செயல்திறனைக் கண்டறிய உயர்மட்ட மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு ஆய்வை மேற்கொண்டு வருகிறது. அதுவரை மருத்துவர்கள் அதை சோதனை நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத் வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது மத்திய சுகாதாரத்துறை. ``பிளாஸ்மா சிகிச்சையின் செயல்திறன் குறித்த ஐ.சி.எம்.ஆர் ஆய்வு முடியும் வரை ஆராய்ச்சி மற்றும் சோதனை நோக்கங்களுக்காக மட்டுமே இந்தச் சிகிச்சை முறை பயன்படுத்தப்பட வேண்டும். பிளாஸ்மா சிகிச்சையின் செயல்திறனை ஆய்வு செய்ய ஐ.சி.எம்.ஆர் நாடு தழுவிய ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது” என்றார் லாவ் அகர்வால்.

கொரோனா
கொரோனா

கடந்த சில நாள்களுக்கு முன்னர் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேதிர ஜெயின் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 நபர்களை பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறை மூலம் மீட்டுக் கொண்டு வந்துள்ளோம் எனத் தெரிவித்திருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு